Showing posts with label நாணய விகடன். Show all posts
Showing posts with label நாணய விகடன். Show all posts

Thursday, September 18, 2008

குழந்தைகளுக்கான சேமிப்பு வழிகள்

'இந்தப் பிள்ளைகளைக் கரைசேர்க்க ஒரு வழி பண்ணிட்டாப் போதும்...' என்பதுதான் இந்தியப் பெற்றோர்களின் உச்சகட்ட கவலையாக இருக்கிறது. தங்களின் ஓய்வுக் காலத்துக்குச் சேமிக்கிறார்களோ இல்லையோ.. தங்கள் மகள் மற்றும் மகன்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுக்கு எப்பாடுபட்டாவது சேமிப்பதை ஒரு தவமாகவே கொண்டிருக்கிறார்கள். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் கடமை இன்னும் பல மடங்கு கூடிவிடுகிறது.

''ஒரு பிள்ளைக்கு இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை முடிக்க இப்போது சுமார் 7 லட்ச ரூபாய் செலவாகும். இதுவே, இன்னும் 15 ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போது சுமார் 30 லட்ச ரூபாய் இருந்தால்தான் நிலைமையைச் சமாளிக்கமுடியும். அந்த அளவுக்கு பணவீக்க விகிதம் மற்றும் கல்விச் செலவுகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. முறையாகத் திட்டமிட்டு குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொண்டு வந்தால், அனைத்தையும் சுலபமாகச் சமாளிக்கலாம்'' என்கிறார், மதுரையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு.

அவரே தொடர்ந்து, ''குழந்தை பிறந்த உடனே அதற்காகச் சேமிக்க ஆரம்பிப்பதுதான் சிறந்தது. ஒரு தம்பதி, குழந்தை பிறந்த உடன் மாதம் தோறும் எஸ்.ஐ.பி. முறையில் 2,000 ரூபாய் முதலீடு செய்துவருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால் 17 வயதில் அந்தப் பிள்ளை கல்லூரிக்குப் போகும்போது அது 16.70 லட்சம் ரூபாயாகப் பெருகியிருக்கும். அதுவே, குழந்தை பிறந்து ஓராண்டு கழித்து முதலீட்டைத் தொடங்கி இருந்தால், அத்தொகை 14.30 லட்ச ரூபாயாகத்தான் இருக்கும். அதாவது, முதலீட்டில் 24 ஆயிரம் ரூபாய்தான் குறைந்திருக்கும். ஆனால், வருமானத்தில் 2.40 லட்ச ரூபாய் குறைந்து போயிருக்கும். எனவே, எவ்வளவு இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிக்கிறீர்களோ, அதற்கு ஏற்ப அதிக தொகை கிடைக்கும்'' என்றார்.

கோவர்தனன் பாபு சொன்னது போல குழந்தைகளுக்காகச் சேமிக்கும் ஆட்கள் யார் என்று தேடியபோது சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேஷ் சிக்கினார்.

''வெங்கடேஷ் மட்டுமல்ல... பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறாக இது இருக்கிறது. குறைவான வருமானத்தைக் கொடுத்து வந்தாலும், சில்ரன்ஸ் பிளான்கள் என்று இருக்கிற மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்ஷூரன்ஸ் திட்டங்களைத்தான் தேர்வு செய்துவருகிறார்கள். இப்படி தேர்ந்தெடுப்பதைவிட நல்ல ரிட்டர்ன் தரக்கூடிய திட்டங்களைத் தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும்'' என்றதோடு, ஒருவர் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.




''ஒருவரின் மாதச் சம்பளத்தில் அவரின் செலவு மற்றும் இதர வாய்ப்பு வசதிகளைப் பொறுத்து 25-40% வரை சேமிக்கமுடியும். அனைவருக்குமான பொதுவான ஃபார்முலா சம்பளத்தில் சேமிப்பு என்பது 30% ஆக இருக்கிறது. இந்த சேமிப்புத் தொகையில் குழந்தைகளில் எதிர்காலத்துக்காக 60%-ஐ சேமிப்பது நல்லது. பெண் குழந்தை என்கிறபோது சேமிப்பைச் சற்று அதிகரிப்பது அவசியமாக இருக்கிறது. இது எதற்கு சொல்லி விளக்க வைக்கத் தேவையில்லை..!'' என்றவர், சேமிப்பை எப்படி முதலீடாக்குவது என்பதைப் பற்றிச் சொன்னார்.


''குழந்தையின் வயது 10-12-க்கு கீழ் இருக்கும்போது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவரவேண்டும். 12 வயதுக்கு மேல் ஆகும்போது, ரிஸ்க் இல்லாத, அதே நேரத்தில் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைத் தரும் 'ஃபிக்ஸட் மெச்சூரிட்டி மியூச்சுவல் ஃபண்ட்' திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டையும் தேர்வு செய்யலாம். ஆனால், வரிக்குப் பிந்தைய லாபத்தை கருத்தில் கொண்டால் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டங்கள் லாபகரமானவை...!'' என்றவர், இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

''பிராக்டிக்கலாக யோசித்தால் பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்காக இன்ஷூரன்ஸ் திட்டங்களை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. சிறு குழந்தைகளுக்கு காப்பீடு தேவையில்லாத ஒன்று. இதற்குப் பதில் முழுமையான முதலீட்டுத் திட்டத்தில் பணத்தைப் போட்டுவந்தால் அவர்களுக்கான தேவையைச் சுலபமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். மேலும், பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கான முதலீட்டை பெற்றோர்களின் பெயரிலே எடுப்பதுதான் நல்லது'' என்றார்.

சென்னை வடபழனியை சேர்ந்த பி.டி.மஹாராஜன் தொழிலதிபராக இருக்கிறார். அவர், ''பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் போன்ற செலவுகளுக்காகத் திட்டமிடுவது மட்டுமல்ல... அவர்களுடைய தனிப்பட்ட விருப்பங்களையும் தெரிந்து அதற்கு ஏற்பவும் செயல்பட வேண்டும். என் மகள்கள் காவியா யும், அனன்யாவும் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்பவும் இப்போதே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீட்டைச் செய்து வருகிறேன்'' என்றார்.

மஹாராஜனின் பாதை தெளிவாக இருப்பதாகப் பாராட்டிய கோவர்தனன் பாபு, ''அதிக ரிஸ்க் உள்ள பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்துவரும் நிலையில், பணம் தேவைப்படும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் அதனை ரிஸ்க் குறைவாக உள்ள அல்லது ரிஸ்க் இல்லாத திட்டங்களுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்கள் அல்லது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். அப்போது ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சந்தை சரிந்திருந்தால், அது சரியாகும் வரை காத்திருந்து முதலீட்டை மாற்றுவதுதான் லாபகரமாக இருக்கும்'' என்றார்.

பொதுவாக பெற்றோரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்துதான் முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். சிறிது, நடுத்தரம், அதிக ரிஸ்க் என்று மூன்று வகையாக எடுத்துக் கொள்ளலாம். ரிஸ்க் இல்லாத திட்டங்களாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன. சிறிது ரிஸ்க் உள்ள திட்டங்களாக கடன் சார்ந்த பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. நடுத்தர அளவு ரிஸ்க் கொண்ட திட்டங்களாக பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும்,. அதிக ரிஸ்க் கொண்ட திட்டங்களாக பங்கு மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில், எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும் என்றால், நாம் செய்யும் முதலீடு தெளிவானதாக இருக்கவேண்டும். திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!


 நன்றி: நாணய விகடன்

Friday, July 11, 2008

விலைவாசி உயர்வு ..... சமாளிக்க சில டிப்ஸ்...

1) சேமிப்பை கைவிடாதீர்கள்

சேமிப்பைக் குறைக்காமல் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். சேமிப்பையும் இதுபோன்ற நேரத்தில் தங்கமாகச் சேர்ப்பதுதான் சரியானதாக இருக்கும்.

2) பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துங்கள்

முடிந்தவரையில் பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள். சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும்போதும் தனித்தனியே போகாமல் நேரத்தைத் திட்டமிட்டுக் கொண்டு ஒரே வாகனத்தில் செல்வதால் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தலாம்.

3) ஓட்டல் பில் வேண்டாமே

மாதத்துக்கு நான்கு தடவை குடும்பத்துடன் வெளியில் ஓட்டலுக்குச் சாப்பிடச் செல்வது வழக்கம் என்றால், அதை இரண்டு தடவையாகக் குறைத்துக் கொள்ளலாம்.

4) வீட்டுக் கடனை மாற்றுங்கள்

வீட்டுக் கடன் வாங்கியவராக இருந்தால் உங்கள் வங்கியின் மாறுபடும் வட்டிவிகிதம் என்னவென்பதைப் பாருங்கள். 11 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் உடனடியாக 9.50% வட்டிவிகிதம் உள்ள வங்கிக்கு உடனடியாக மாறுவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். அல்லது கணிசமான தொகை கையில் இருந்தால், அதைக்கொண்டு கடனில் ஒருபகுதியை அடைத்துவிடலாம். கழுத்தை நெறிக்கும் கடன் தவணையில் இருந்து தப்பமுடியும்.

5) எண்ணெய் குறையுங்கள்

ஆரோக்கியத்துக்கும் பட்ஜெட்டுக்கும் நல்லது. அதேபோல விரைவில் கெட்டுப்போகாத பருப்பு வகைகளை மொத்த விலைக்கடையில் வாங்குவது லாபகரமானது.

6) செல்போன் பில்லை கவனியுங்கள்

சுருக்கமாகப் பேசி முடிப்பது, தகவல்களைச் சொல்ல எஸ்.எம்.எஸ்-ஐ பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் செல்போன் செலவை நன்றாகவே குறைக்கமுடியும்.

7) மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்

அதிக மின்சாரம் குடிக்கும் பொருட்களை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரச் செலவைக் குறைக்கலாம்.

8) கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்துங்கள்

கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தும்பட்சத்தில் வட்டி எதுவும் கிடையாது. இந்த வசதியைப் புத்திசாலித்தனமாகவும், கவனமாகவும் பயன்படுத்தினால் நல்ல லாபம் உண்டு. நம் சேமிப்புப் பணத்துக்குக் கிடைக்கும் குறைந்தபட்சமான 3.5% வருமானம் லாபமான ஒன்றுதானே!

9) பார்ட்டைம் வேலை

இல்லத்தரசிகளும் டியூஷன் போன்ற பகுதிநேர வேலை செய்வதன் மூலம் குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

[நன்றி: நாணய விகடன்]

Friday, April 25, 2008

பாதுகாப்பான துறை, பாதிப்புள்ள துறை & நீண்டகால முதலீடு துறைகள்

பாதுகாப்பான துறை -- பார்மா துறை. இதன் பங்குகளில் எப்போதும் முதலீடு செய்யலாம்.

பாதிப்புள்ள துறைகள் - ஆட்டோமொபைல் துறை, வங்கித்துறை.

நீண்டகால முதலீடு துறைகள் - எஃப்.எம்.சி.ஜி., பவர் செக்டார், அடிப்படைக் கட்டுமானம், கல்வித்துறை. இவற்றை நீண்டகால முதலீடாகச் செய்யும்போது நல்ல வருமானத்தைத் தரும் முதலீடுகளாக நிச்சயம் இருக்கும்.''

-- மயன்க் ஷா, அனக்ராம் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி

[நன்றி: நாணய விகடன்]

Thursday, November 1, 2007

மியூச்சுவல் ஃபண்டில் உண்மையான வருமானம் எவ்வளவு?

பெரும்பாலும் முதலீட்டின்போது, நுழைவுக் கட்டணம் சுமார் 2.50% செலுத்த வேண்டியிருக்கும். ஓராண்டுக்குள் அந்த முதலீட்டைத் திரும்ப எடுத்தால், வெளியேறும் கட்டணம் சுமார் 2 - 3% கொடுக்க வேண்டி இருக்கும். முதலீடு ஓராண்டுக்கு உட்பட்டதாக இருக்கும்பட்சத்தில் குறுகியகால மூலதன ஆதாய வரியாக 10% செலுத்தவேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 40% ரிட்டர்ன் என்று சொல்லப்பட்ட முதலீட் டில் கையில் கிடைக்கும் உண்மையான வருமானம் சுமார் 25% ஆகிவிடும்.

அதே நேரத்தில், நுழைவுக் கட்டணம் இல்லாத திட்டம், ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீடு என்றால் உண்மை யான வருமானம் சுமார் 35%க்கு மேல் இருக்கும்.

ஒரு திட்டம் 40% வருமானம் சம்பாதித்து இருக்கிறது என்றால், அது முதலீட்டாளர் கைக்கு வரும் முன்பு, அதனை விட அதிகமாக வருமானம் ஈட்டி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் நிர்வாகச் செலவு மற்றும் லாபத்தை எடுத்துக் கொண்டு, அதனைக் கழித்துதான் என்.ஏ.வி. மதிப்பை வெளியிடு கிறது. இது திட்டத்தின் தன்மை மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து 0.25% தொடங்கி 3% வரை செல்கிறது. இதையும் சேர்த்தால் உண்மையான வருமானம் என்பது அதிகம்.

மேலும் டிவிடெண்ட் வருமானத்தைக் கணக்கிடு வதிலும் நம்மில் பலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

டிவிடெண்ட் ஆப்ஷனை எடுத்துக்கொண்டால், முக மதிப்புக்குத்தான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. டிவிடெண்ட் சதவிகிதத்துக்கும் என்.ஏ.விக்கும் தொடர்பு கிடையாது.

ஒருவர் என்.எப்.ஓவின் போது 10 ரூபாய் முக மதிப்பில் 10,000 ரூபாய் முதலீடு செய் கிறார் என்றால் அவருக்கு 1,000 யூனிட்கள் (நுழைவுக் கட்டணம் இல்லாத நிலையில்) ஒதுக்கப்படும். இதே திட்டத்தில் ஓராண்டு கழித்து மற்றொருவர், என்.ஏ.வி. 20 ரூபாய் விலையில் அதே 10,000 ரூபாயை முதலீடு செய்தால், அவருக்கு 500 யூனிட்கள்தான் கிடைக்கும். இந்நிலையில் 40% டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டால், என்.எஃப்.ஓவில் வாங்கியவருக்கு டிவிடெண்டாக 4,000 ரூபாய் கிடைக்கும். இடையே முதலீடு செய்த வருக்கு டிவிடெண்டாக 2,000 ரூபாய்தான் கிடைக்கும்.

இருவரின் முதலீட்டு தொகை ஒன்றாக இருந்தாலும், கையில் இருக்கும் யூனிட்டுக்கு ஏற்ப ரிட்டர்ன் கிடைத்துள்ளது.


நன்றி: நாணய விகடன்