Thursday, March 13, 2008

யுரோ, யென், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ...

எதுவும் சொல்லிகிறமாதிரி இல்ல...

உலக சந்தை எல்லாவற்றிக்கும் நேற்று பங்கு சந்தையில் பெரிய சரிவு என்றாலும்.... நமக்கு கொஞ்சம் பெரிய அடிதான்.

மும்பை பங்கு சந்தையில் 777.29 புள்ளிகள் குறைந்து 15,350.69 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தை 246.65 புள்ளிகள் குறைந்து 4,625.35 புள்ளிகளில் முடிந்துள்ளது.

யுரோவுக்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு குறைந்துள்ளது. 1 யுரோ = $ 1.56.

12 வருடங்களுக்கு பின் யென் க்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு(ம்) 99.75 யென் ஆக குறைந்து சந்தையின் முடிவில் ஒரு அமெரிக்க வெள்ளிக்கு 100.57 யென்னில் இருக்கிறது. ஜப்பான் பொருளாதரத்தை இது மேலும் பாதிக்கலாம்...

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு $ 110 யை தாண்டியுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (முதல் முறையாக) 1001 அமெரிக்க வெள்ளி என்ற புதிய சாதனையை தொட்டுவிட்டு(!), நாளின் இறுதியில் 997.10யில் இருக்கிறது. இன்னும் முதல் காலண்டு முடிவாகத நிலையில் .... இந்த வருடத்தில் மட்டும் 20% அதிகரித்துள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி:

திருநெல்வேலி : ஆன்லைன் மூலம் செய்யப்படும் தங்க வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் நேற்று 500க்கும் நகைப்பட்டறைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது இன்டர்நெட் மூலமாக ஆன்லைனில் தங்க நகை வியாபாரம் நடந்து வருகிறது. தங்க விலை நிலையாக இல்லாமல் அதிகரித்தும், குறைந்தும் வருவதால் தங்க நகை செய்வோர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு தரும் விதமாக ஆன்லைன் மூலமாக செய்யப்படும் தங்க நகை வியாபாரத்திற்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி நெல்லை கூலக்கடை பஜாரில் நேற்று 500க்கும் மேற்பட்ட தங்க நகை செய்யும் பட்டறைகளும், கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அது குறித்து எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.,க் கள்,அமைச்சர்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ள நகை பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடு படப்போவதாக தெரிவித்துள்ளனர்.


ம்ம்ம்..... அமெரிக்க வெள்ளியின் மதிப்பு மேலும் குறைய அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகவே தென்படுகிறது.

Tuesday, March 11, 2008

நமது சந்தைகளிலும் எதிரொலிக்குமா?

செவ்வாயன்று (மார்ச் 11, 2008) முடிவடைந்த அமெரிக்க சந்தை யாரும் எதிர்பாரதது. அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை எப்படி சமாளிப்பது என்று ரொம்பவே திணறிதான் போயுள்ளது அமெரிக்க பெஃடரல்.

வங்கிகளுக்கு 200 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளை (கடனாக) பட்டுவாடா செய்யபோவதாக வந்த பெஃடரலின் அறிவிப்பையொட்டி அமெரிக்க பங்கு சந்தை (DOW) 417 புள்ளிகள் மேலே சென்று 12,157ல் இருக்கிறது. அமெரிக்க பங்கு சந்தை வரலாற்றில் இது நான்காவது மிகப் பெரிய உயர்வு.
சூலை 2002 ஆண்டிற்குபின் நேற்றுதான் இதுபோல் நடந்துள்ளது.

NASDAQ 87 புள்ளிகள் மேலே சென்று 2,256ல் தாக்கு பிடித்துள்ளது.

இந்த 200 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் 20 நிறுவனங்களுக்கு (வங்கிகள் & நிதி நிறுவனங்கள்) 28 நாட்கள் termல் தருவதாக அறிவித்துள்ளது.

இதன் தாக்கம் இன்று நமது சந்தைகளில் எதிரொலிக்குமா?

கொசுறு:

நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை $ 109.72 வரை சென்று, தற்பொழுது $108.75ல் முடிந்துள்ளது. கடந்த ஆறு வர்த்தக நாளில் மட்டும் கச்சா எண்ணெய் விலை ஐந்தாவது தடவையாக உயர்ந்திருக்கிறது. ஜனவரியில் பேரல் ஒன்றிற்கு 87 அமெரிக்க வெள்ளிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 1, 2008

விகடன் வரவேற்பறையில் பங்குவணிகம்: வாழ்த்துக்கள்!

இந்த வாரம் [05-03-2008] 'விகடன் வரவேற்பறை'யில் நமது 'பங்குவணிகத்தை' குறிப்பிட்டு வந்துள்ளது.

தினமும் எழுதுவது ......... அதுவும் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தான் தெரிந்து கொண்ட விசயங்களையும் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய செயலே!

அதை திறம்பட செய்யும் 'பங்குவணிகத்திற்கு' நன்றி!

வாழ்த்துக்கள், சரவணக்குமார்!

தங்கள் தாயாரின் உடல்நலம் விரைவில் குணமடைய எங்களுடைய பிராத்தனைகள்.

Friday, February 29, 2008

மத்திய நிதி அறிக்கை 2008 - 3 [ஒதுக்கீடு ]

  • மண் பரிசோதனை மையங்களுக்கு 75 கோடி ரூபாய்.
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய். [சிரிக்காதீங்க... அமைச்சர் சீரியசாதான் சொன்னாரு...!]
  • பொது விநியோக திட்டத்துக்காக ரூ 32,676 கோடி மானியம்.
  • தேசிய தோட்டக்கலை அமைப்புக்கு 1100 கோடி ரூபாய்.
  • தேயிலை ஆராய்ச்சி அமைப்புக்கு சிறப்பு ஒதுக்கீடாக 20 கோடி ரூபாய்.
  • தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்திற்கு 12,966 கோடி ரூபாய். [நீங்க பண்ற வளர்ச்சி திட்டங்களின் விவரங்களை அறிவிப்பு பலகையாக வைத்தால் அந்தப் பக்கம் போற வர்ற எங்களுக்கும் புரியுமில்லை.... எதுக்கெதுக்கோ தோரணங்களாம் வைக்கிறீங்க. ஒரு திட்ட வளர்ச்சியை பத்தி ஒரு அறிவிப்பு பலகை வைக்கமாட்டீங்களா?]
  • குழந்தைகள் மேம்பாட்டுக்காக அரசு இந்த ஆண்டு 24 சதவீதம் உயர்த்துகிறது. [ஓ... அப்பனா போன வருடமும் இதுமாதிரி ஒரு திட்டம் இருந்ததா?]
  • பள்ளிகளில் குடிநீர் வசதியை ஏற்படுத்த ரூ 200 கோடி.
  • துப்புரவு திட்டங்களுக்கு ரூ. 1200 கோடி.
  • தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 75 கோடி.
  • தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 9 கோடி.
  • சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை நிறுவ ரூ 300 கோடி.
  • கல்வி நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 8,000 கோடி.
  • பாரத் நிர்மாண் திட்டத்துக்காக ரூ 31,280.
  • நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் 1,05,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.


2007-2008 ஆண்டில் நிறைவேறிய/நிறைவேற போகும் திட்டங்கள் இங்கே!!

முழு உரை

ஒண்ணும் புரியலைப்பா... நிதி அமைச்சர்கிட்ட நேரா கேள்விகேட்டாதான் புரியும் நினைக்கிறவங்க இங்க போய் முயற்சி செய்து பார்க்கலாம்.

மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 2


  • சிறிய கார்கள் மீதான கலால் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளது.


  • இரு சக்கர வாகனங்களுக்கான வரி 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் விலை குறையும்.


  • ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் கையாள்வதற்கான வரி [Banking Cash Transaction Tax: (BCTT) ] ஏப்ரல் 1, 2008ம் தேதியிலிருந்து கிடையாது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ 25,000 மேல் இனிமேல் எடுக்கலாம்.


  • கடலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆண்டிப்பட்டி(!) போன்ற இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரப் பகுதிகளில் மருத்துவமனை துவங்கினால் 5 ஆண்டுகளுக்கு வரி இல்லை.


                            • அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாக ஆறாவது ஊதியக் குழு அடுத்த மாதம் (மார்ச் 2008) தனது அறிக்கையை தாக்கல் செய்யப்போகிறார்கள். அதன்பின் அதை ஆராய்ந்து அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கபடும். [ அதுவரை விலைவாசி கட்டுப்படுத்துவீங்களா? ]

                            • ஆந்திரப்பிரதேசம், பிகார் மற்றும் ராஜஸ்தானில் மூன்று ஐஐடிக்கள் நிறுவப்படும். மேலும் நாடு முழுவதும் 16 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

                            • போபால், திரிபுராவில் அகில இந்திய அறிவியல் கழகங்கள் (IISc) உருவாக்கப்படும்.

                            • நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் 6,000 பள்ளிகளைக் கட்ட திட்டம். கல்விக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

                            மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 1

                            இன்று (பெப்ரவரி 29,2008) காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் [7 வது முறை] நிதி அறிக்கை மற்றும் 2008 ஆண்டுகான திட்டமிடலை தாக்கல் செய்தார்.

                            நான்கு வருடங்களாக எதிர்பார்த்த வரி விலக்கிற்கான வருமான அளவு இந்தாண்டுதான் உயர்த்தப்பட்டுள்ளது.

                            விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது (நீங்களுமா ப.சி..?) .

                            நல்ல செய்தி முதலில்....;)

                            • வரி விலக்கிற்கான வருமான அளவு 1,10,000 ரூபாயிலிருந்து 1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இனி ரூ. 1,50,000 வருமானம் வரை வரி இல்லை.

                            • பெண்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,45,000 ரூபாயிலிருந்து 1,80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி 1,80,000 ரூபாய் வரை வருமானம் வரை வரி இல்லை.

                            • மூத்த குடிமகன்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,95,000 ரூபாயிலிருந்து 2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி அவர்கள் 2,25,000 ரூபாய் வரை வருமானம் வரை கட்ட தேவையில்லை.

                            விரிவான அட்டவணை, எவ்வளவு சேமிப்பு போன்ற தகவல் இங்கே...

                            Tuesday, February 26, 2008

                            வரி விலக்கு: பரஸ்பர நிதி முதலீட்டில்

                            பரஸ்பர நிதி முதலீட்டின் மூலம் வரி விலக்கு கிடைக்க சில வழிமுறைகள் இருக்கிறது. தெரிந்த விடயமாக இருந்தாலும், வரி கட்டும் நேரம் அல்லவா! அதனால் நம் நினைவுக்காக....

                            ஈ.எல்.எஸ்.எஸ் [E.L.S.S - Equity Linked Saving Schemes]: வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டம்

                            வங்கிகளில் ஐந்தாண்டுகள் நிரந்தர முதலீடு செய்தாலும் வரிச்சலுகை கிடைக்கும்பொழுது இந்த திட்டத்தில் முதலீடு பண்ணவேண்டிய அவசியம் என்ன?

                            என்ன கொஞ்சம் ஆசைதான்!

                            வங்கிகளில் பண்ற முதலீடு 8 அல்லது 9 சதவீத வட்டி(தான்)! கடந்த வருடத்தில் ஈ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள் 25லிருந்து 30 சதவீதம் வருமானத்தை தந்துள்ளது. நல்ல வருமானம். அதற்கும்மேல் டிவிடெண்ட்!!





                            • ஈ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் செய்யும் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது.

                            • மற்ற பரஸ்பர நிதிகளில் இருப்பதைப்போல இந்த திட்டத்திலும் வளர்ச்சி (Growth) மற்றும் டிவிடெண்ட் (Divident option)என்று இரண்டு வகையுண்டு.

                            • இதிலும் எஸ்.ஐ.பி (S.I.P) திட்டம் இருக்கிறது. மாதத்திற்கு 500 ரூபாயிலிருந்து தொடங்கலாம்.

                            • ஆனாலென்ன மற்ற திட்டங்களைப்போல வளர்ச்சிக்கும், டிவிசெண்ட்க்கும் மாற முடியாது.

                            வைப்பு நிதி (PF) போல் கடைசி நேரத்தில் முதலீடு செய்யாமல், நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே முதலீட்டு செய்வது நல்லது. பங்குச்சந்தைகள் 'காளை'யாகும் பொழுது இந்த திட்டத்திலிருந்து சில வருமானங்களும் வர வழியுண்டு.

                            இது வரி விலக்கில் 80C கீழ் வரும்.

                            அதலாம் சரி... எந்த ஈ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் முதலீடு செய்வது?

                            இதுக்கு பதில் சொல்றதுதான் கஷ்டம்! வழக்கம்போல் பரஸ்பர நிதி இணையதளத்தில் விவரங்களை தேடலாம். கடந்த காலகட்டத்தில் இதில் இருக்கும் திட்டங்களின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யலாம்.

                            அப்படி பார்த்த சில திட்டங்கள்:

                            1. HDFC Tax saver

                            2. Magnum Tax gain

                            3. Birla Sun Life Tax Relief '96

                            4. Sundaram BNP Paribas Taxsaver

                            இதில் சேரும் புதிய பரஸ்பர நிதி: SBI TAX Advantage Fund - Series I. மார்ச் 3, 2008ம் தேதியுடன் முடிவடைகிறது. 10 வருடம் காலவரையுள்ள திட்டம் (Closed Ended Fund Type). இப்பொழுதுதான் புதுசாக சந்தைக்கு வரப்போவதால் உள்ளே 'நுழைய' (entry load) கட்டணமில்லை. 'வரலாறு' இல்லாததால் இப்பொழுது இதை தவிர்ப்பது நல்லது.