"மூணு மாசந்தான் ஆகுது... இப்போ என்னோட ஷேர் வேல்யூ கிறு கிறுன்னு எகிறியாச்சு. வித்துரலாமா...?’’
‘‘ஐயோ... அப்படியெதுவும் பண்ணிராதே... மும்பையில் சென்செக்ஸ் இப்போ செம ஹை ஸ்பீடு. கொஞ்சநாள் விட்டுப்பிடிக்கலாம். நிதானமா விளையாடித்தான் பார்ப்போமே...’’ நாற்பது வயது ஆசாமிகள் இப்படிப் பேசிக்கொண்டால் அது நார்மலான விஷயம்தான். அதுவே இரண்டு இளம்பெண்கள் பேசினால்...? யெஸ். செஸ் போர்டில் காய் நகர்த்துவது போல ஷேர் மார்க்கெட்டிங்கில் கில்லி அடிப்பதுதான் இப்போதைய இளசுகளின் லேட்டஸ்ட் டிரெண்ட்.
‘‘ஷேர் மார்க்கெட்டிங்கா...? அது புலிவாலைப் புடிக்கிற மாதிரியான சமாச்சாரமாச்சே?’’
‘‘ச்சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. குறுகிய காலத்துல பணம் சம்பாதிக்கணும்ன்னா அதுக்கு ஷேர் வாங்கறதுதான் ஒரே வழி. பேங்குல பணத்தைப் போட்டா அது வட்டி போட்டு குட்டிப்போடுறதுக்குள்ள நமக்கு வயசு முடிஞ்சுடும். ஆனா, ஷேர் மார்க்கெட்டிங்குல துணிஞ்சு இறங்கலாம். என்னோட அப்பா பாங்க் மானேஜரா இருக்கார். காலேஜ் போற சமயத்துல நிறைய்ய பாக்கெட் மணி கிடைக்கும். எவ்வளவு பணத்தைத்தான் செலவு பண்றது? அதான் நானும் ஷேர் வாங்க ஆரம்பிச்சேன். இப்போ ஒரு வருஷமாச்சு. மளமளன்னு பணமும் பெருகிடுச்சு...’’
கல்லூரி மாணவியான ரங்கமணியின் பேச்சில் சந்தோஷப் படபடப்பு. இருபத்து இரண்டே வயதில் ஷேர் நுணுக்கங்களை விரல் நுனியில் அளந்து வைத்திருக்கிறார்.
பரணிக்கு வயது இருபத்தாறு. பிரபல பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் நல்ல வேலை. அதுவும் கைநிறைய சம்பளத்தோடு. ‘‘என்னோட மாதச் சம்பளம் முப்பதாயிரம். மத்தவங்க மாதிரி வீக் என்ட் பார்ட்டியில செலவு செய்யறதெல்லாம் வீண் காரியம்ன்னு தோணுச்சு. ஷேர் வாங்கறது, விக்கறதுல நிறைய விஷயங்களை, என் தம்பி சொல்லிக் கொடுத்தான்.
ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்.ன்னு ஒரு லட்ச ரூபா வரைக்கும் இப்போ என்னோட பணம் புழங்கிட்டிருக்கு. இதுதவிர, ஒவ்வொரு மாசமும் சம்பளம் வாங்கின அடுத்த நிமிசமே ஒரு குறிப்பிட்ட தொகையை ஷேர் வாங்கறதுக்காக ஒதுக்குவேன். சிரித்துக் கொண்டே சொல்கிறார் பரணி.
என்னோட ஃப்ரெண்ட்ஸ§ங்க எல்லாருமே ஷேர் ஹோல்டர்ஸ்தான். சி.என்.பி.ஸி., எக்னாமிக் டைம்ஸ், இண்டர்நெட்னு மாய்ஞ்சு மாய்ஞ்சு ஷேர் விவகாரங்களை உன்னிப்பா கவனிப்போம். மொதல்ல 50 ஆயிரம் முதலீடு செஞ்சேன். அஞ்சு வருஷமாச்சு. இப்போ வேலைக்கு போறேன். அதுல வர்ற சம்பளத்துல ஒரு பகுதியும் ஷேர்.. ஷேர்... எல்லாமே ஷேர் வாங்கறதே வேலையாயிடுச்சு.’’ பூரிப்பாக முடிக்கிறார் திவ்யா. வயது என்னான்னு கேட்கறீங்களா...? வெறும் இருபத்திநாலுதான்.
கால்சென்டர் ஊழியரான முருகனுக்கு நிறைய எதிர்காலக் கனவுகள். ‘‘கனவு கண்டு என்ன சார் பிரயோசனம்...? பணம் வேணுமே... நாம செய்யுற வேலையோட இன்னொரு பிஸினசையும் சேர்த்து ஆரம்பிக்க முடியுமா...? உட்கார்ந்த இடத்துலர்ந்தே இப்போ பணத்தை அள்ள முடியுதுன்னா அதுக்கு காரணம் ஷேர் மார்க்கெட்தான். டீலர்களோட உதவியில எந்த கம்பெனி முன்னணியில ஓடிட்டிருக்குன்னு தெரிஞ்சுடுது. விக்குற நேரம் வந்தா சுலபமா வித்துட்டு தப்பிச்சிடலாம். ஆனா, எச்சரிக்கையா விளையாடணும்’’ என்கிறார் இந்த பொறுப்பான வாலிபர்.
‘‘ஷேர் மார்க்கெட்டிங்ன்னா ஏதோ பிஸினஸ்மேன்களின் விவகாரம்ன்னு பலபேரு நினைக்கிறாங்க. ஆனா, இதுல அதிகம் ஜெயிக்கறது இளைஞர்கள்தான்.
ஆங்கில அறிவு, கொஞ்சம் கம்ப்யூட்டர் பழக்கம், வரவு, செலவை கணக்கு வைச்சுக்குற பொறுப்பான மனமிருந்தா பள்ளிக்கூடப் பசங்ககூட இதுல கலக்கலாம்...’’ அதிரடியாக விளக்குகிறார் ராஜ்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருபத்தி நாலு வயது இளம்புலிதான் இவர்.
‘‘அது சரி... பந்தயத்துல இந்தக் குதிரைதான் ஜெயிக்கும்ன்னு எப்படி முடிவு பண்றீங்க...? கொஞ்சம் ஷேர் டிப்சுகளை அள்ளிவிடுங்களேன்...’’ ஐவரிடமும் கேட்டோம்.
‘‘எந்த கம்பெனியோட ஷேரை வாங்கப் போறோமோ அதுபத்தின விவரங்களை முழுசா தெரிஞ்சுக்கணும். ஒரே கம்பெனி பேர்ல மொத்த பணத்தையும் கொட்டறதுக்குப் பதிலா அதை மூணு விதமா பிரிச்சுக்கலாம். ஐம்பது சதவிகித தொகையை நீண்ட நாளைக்கு விட்டுவைப்பது (Long Term), இருபத்தைந்து சதவிகித தொகையை மூன்று அல்லது ஆறு மாத காலத்திற்குள்(Short Term) விற்றுவிடலாம். மற்ற இருபத்தைந்து சதவிகிதத்தை நீங்கள் விருப்பம்போல விளையாடலாம். அதாவது, காலையில் வாங்கி மாலையில் விற்பது. நீங்கள் 50 ஆயிரத்தை முதலீடு செய்திருக்கிறீர்களா...? அந்தத் தொகை 80 ஆயிரத்தை எட்டியிருக்குமே...? உடனே 50 ஆயிரத்துக்கான ஷேரை விற்றுவிட்டு மீதி 30 ஆயிரத்துடன் புதிய ஆட்டத்தை மீண்டும் தொடங்கலாம். எல்லாத் தொழிலிலும் இருப்பதுபோல இதிலும், இழப்பு ஏற்படலாம். எப்போதாவது. சஞ்சலப்படாம சாதுர்யமா காய் நகர்த்தினா நிச்சயம் நீங்களும் ‘ஷேர்’ கில்லாடிதான்..
நன்றி: குமுதம்