Monday, April 30, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவதற்கு முன் ....
மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தமான சில முக்கியமான வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்.....

1. அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி ~ Asset Management Companies (AMC) - மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வெளியிடும் கம்பெனிகள். உதாரணத்துக்கு ரிலையன்ஸ் (Reliance), SBI, HSBC, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ...... மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிப்பர்கள். இந்த ஏ.எம்.சி\யின் நிகர சொத்து மதிப்பு 10 கோடி ரூபாய்க்குமேல்(!) இருக்கவேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது.

2. நிகர சொத்து மதிப்பு ~ Net Asset Value (NAV) : ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் அன்றாட நிகர சொத்து மதிப்பு(என்.ஏ.வி). அத்திட்டத்தின் கீழ் உள்ள மொத்த யூனிட்களால் வகுத்தால், அதுதான் ஒரு யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு. [இந்த NAV மதிப்பை, அதே நாள் இரவு எட்டு மணிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களின் கூட்டமைப்பான ‘ஆம்ஃபி'யின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது. The Hindu Business Line, Economic Times போன்ற தினசரிகளில் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் NAV (ஒரு யுனீட்டின் விலை)யும் தினமும் வெளியாகும். ]

3. 'நியூ ஃபண்ட் ஆஃபர்' (New Fund Offer/N.F.O.) : மியூச்சுவல் ஃபண்ட் திட்ட யூனிட் வெளியீட்டை முதன் முதலில் பொதுமக்களுக்கு விற்க வரும்போது குறிப்பிடுவது.

4. என்ட்ரி லோட் (Entry Load): ஆரம்ப கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தினுள் நுழைவதற்கான முதலீட்டுக் கட்டணம். 'நியூ ஃபண்ட் ஆஃபர்' (New Fund Offer/N.F.O.) ன் பொழுது இந்தக் கட்டணம் இருக்காது.

5. எக்ஸிட் லோட் (Exit Load): ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து வெளியேற நினைக்கும்போது, அதற்குச் செலுத்த வேண்டியிருக்கும் கட்டணம்.

சரி... இப்ப விசயத்துக்கு வருவோம் ....
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ....

1. பான் கார்டு (PAN CARD) **

2. தெரிந்த மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் (Agent) உதாரணத்துக்கு.... கார்வி (Karvy), UTI

3. துவக்கத்தில் குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய். பின்னர் மாதாமாதமோ அவ்வப்போதோ 1,000 ரூபாய் அல்லது அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

அவ்வளவுதான்! Done. Best Of Luck !!

தருமி அவர்கள் சொன்னது போல, "இதான் எனக்குத் தெரியுமே"! அப்படிகிறீங்களா..?

சரி....எந்த மியூச்சுவல் ஃபண்ட்-ல முதலீடு செய்றது, ஏஜென்ட் -கிட்டபோய் என்ன கேட்கிறது?, மியூச்சுவல் ஃபண்டில் மாதாந்திர வருமானத் திட்டம் (MIP) எதுவும் இருக்கா? குறுகியகால முதலிடுகள் (Fixed Matured Plan), Systametic Investment Plan ............. இப்படி எனக்கு தெரிந்ததை அடுத்த பதிவில்....

** மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 50 ஆயிரத்துக்கும் மேல் முதலீடு செய்தால் மட்டுமே பான் கார்ட் எண் தேவை. வேற வேற நாள்-ல வெவ்வேறு விண்ணப்பங்கள் மூலம் குறைந்த தொகையை முதலீடு செய்தால் பான்கார்ட் அவசியம் இருக்காது. ஏன் இந்த 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலனா பான் கார்ட் தேவை? ஏன்னா.....வருமான வரி கட்டணும்னா பான் கார்ட் தேவை... நம்ம 50 ஆயிரம் ரூபாய் "முதலீடு" செய்றோம்னா நம்ம வருமான வரி கட்டக்கூடிய ஆளாத்தான இருப்போம்...அதனாலதான் பான் கார்டு அவசியம்.

** ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், விண்ணப்பத்தோடு நம் அடையாள அட்டை மற்றும் விலாசத்துக்கான சான்றின் நகல் (Address Proof) ஒன்றை இணைக்க வேண்டும். எப்பொழுதும் பணத்தை ஏஜென்ட் (Agent) ரொக்கமாகச் (Cash) கொடுக்க கூடாது. எப்பொழுதும் கிராஸ் செய்யப்பட்ட காசோலை (Cheque) அல்லது டி.டி (DD) மூலமாகத்தான் பணத்தைச் செலுத்தவேண்டும். [நமக்கும் ஒரு record இருக்கும் இல்லையா!] விண்ணப்ப படிவத்தில் வங்கியின் எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண் ணைக் குறிப்பிட வேண்டும்.
[எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண்ணா செக்கின் (Cheque) கீழே, செக் நம்பருக்குப் பக்கத்தில் இருக்கும் ஒன்பது இலக்க எண்].

எதுக்கு இந்த எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண்?

நாம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டில் டிவிடெண்ட் கொடுக்கும்பட்சத்தில் அந்த தொகையை நேரடியாக நம் வங்கிக் கணக்கில் transfer செய்து விடுவார்கள். வங்கிக்கு போற வேலை மிச்சம்.

மியூச்சுவல் ஃபண்ட் - I

எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்...

முதலில், ஏன் மியூச்சுவல் ஃபண்ட்கள்?

பங்கு சந்தையில முதலீடு செய்யணும்னா...
'எந்த பங்குகளை வாங்குவது, அந்த பங்கு அல்லது கம்பெனியின் தற்போதைய நிலை, அவற்றின் எதிர்கால திட்டங்கள், நிதி நிலைமை' போன்ற பல விவரங்களை ஆய்வு செய்யணும். அப்புறம் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு நமக்கு நேரமும், தகவலும் தெரியணும்

'இதலாம் என்னாலமுடியுமேனா!' , நீங்க தாராளமாக பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்.

'இதலாம் ஆராய்ச்சி பண்றதுக்கெல்லாம் யாருக்கு பொறுமை இருக்கு? ' -னு மனசுக்குள்ள ஒரு கேள்வி வந்துச்சுன்னா..... உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட்... ;)

இவ்வாறு அனைவரும் பங்குகளை வாங்க முடியாது என்பதால்தான் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு போகவேண்டும்.

முதலில் முக்கியமான சந்தேகம்.....
மியூச்சுவல் ஃபண்ட் துறைகள் (பைனான்ஸ் [Finance] கம்பெனிகளைப் போல)" காணாமல்" போக வாய்ப்புகள் உண்டா?

ஏமாற்றிவிட்டுச் (காணாமல் போக) செல்வது சாத்தியமில்லைதான் நினைக்கிறேன். ஏன்னா... AMC (Asset Management Companies)யின் நிர்வாகப் பொறுப்பு ஒரு டிரஸ்டிடம் தான் இருக்கு. அந்த டிரஸ்-ல ஃபண்ட் மேனேஜர் (Fund Manager) மற்றும் பலர் இருப்பர். அதனால 'திவால்' ஆக வாய்ப்பில்லை.

மியூச்சுவல் ஃபண்டின் பணம் பங்குகளில்தான முதலீடு செய்யப்படுகிறது. அதனால பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தை வைத்து NAV (Net Asset Value)வின் மதிப்பு கூடும், குறையும். ஆக, ஒட்டு மொத்தமாக பணம் 'காலி'யாகும் வாய்ப்பு இல்லை.

சரி...இதில என்னென்ன திட்டங்கள் இருக்கு....?

சிவாஜி/எம்ஜிஆர் - கமல்/ரஜினி மாதிரி எப்பவும் இரண்டு திட்டங்கள்.
  1. குரோத் ஆப்ஷன் (Growth Option),
  2. டிவிடெண்ட் ஆப்ஷன் (Divident Option)

டிவிடெண்ட் ஆப்ஷனில்,

2a. பே அவுட் (Pay Out)

2b. ரீ இன்வெஸ்ட்மென்ட் ((Re-investment Option)

-னு உட்பிரிவு வேற இருக்குது.


சற்று விளக்க சொல்லனும்-னா ......

1. குரோத் ஆப்ஷன் (Growth Option):
இந்தத் திட்டத்தில் போட்ட பணம் தொடர்ந்து வளர்ச்சி வாய்ப்புள்ள வழிகளில் முதலீடு செய்யப்படும். அதனால் யூனிட்டின் விலை [NAV] கூடி கொண்டே செல்லும். நீண்டகால அடிப்படையில், முதலீடு நல்ல வளர்ச்சி பெறவேண்டும் என்றால் இதை தேர்வு செய்யலாம்.

நிறுத்தி, நிதானமா சிவாஜி மாதிரி ...... மெதுவாதான் வளர்ச்சி...

2a. பே அவுட் - Pay out :

'கையில காசு.. வாயில தோசை' மாதிரி...

ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு தொகை டிவிடெண்ட்-ஆக கிடைக்கும் (Pay Out). ஆம்.... யூனிட்டின் விலை [NAV] குறையும்.

2b.ரீ இன்வெஸ்ட்மென்ட் ((Re-investment Option) :

டிவிடெண்ட் ஆப்ஷனிலேயே, இன்னொரு வகையான ரீ& இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷனில் (Re-investment Option). கொடுக்கப்படும் பணத்துக்குப் பதிலாக, அந்தப் பணம் மீண்டும் அதே யூனிட்களில் மறுமுதலீடு செய்யப்படும்.
அதிகமான யூனிட்கள் நம் கணக்கில் கிடைக்கும்.
[கமல் மாதிரி-னு சொல்லலாமா?]


எனக்கு பிடித்தது 2a - பே அவுட் (Pay out) தான். ;)

சரி... இப்ப எப்படி முதலீடு ஆரம்பிக்கலாம்?-கிறது அடுத்த பதிவில் ......

Friday, April 27, 2007

Initial Public Offer(IPO) & New Fund Offer(NFO)

ஒரு கம்பெனி முதன்முறையாகத் தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்க வரும்போது, அதை "இனிஷியல் பப்ளிக் ஆஃபர்" (Initial Public Offer / IPO) என்கிறார்கள்.

அதேபோல ஒரு மியூச்சுவல் ஃபண்ட் புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்து, ஆரம்பத்தில் அதற்குப் பணம் திரட்டுவதையும் "முதல் விற்பனை" என்ற அர்த்தத்தில் I.P.O. என்றே சொல்லி வந்தார்கள். இதனால், I.P.O. என்பது பங்கு வெளியீடா அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டமா என்பது புரியாமல் குழம்பும் நிலை உருவாகி விட்டது. அதனால் இந்திய பங்குச் சந்தையின் கண்காணிப்பாளர் 'செபி தலையிட்டு, இனி மியூச்சுவல் ஃபண்ட் திட்ட யூனிட் வெளியீட்டை வித்தியாசப் படுத்தித்தான் குறிப்பிட வேண்டும்' என்று அறிவித்து, 'நியூ ஃபண்ட் ஆஃபர்' (New Fund Offer/N.F.O.) என்ற வார்த்தையை அறிமுகம் செய்தது.

அதன்பிறகு, சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள எல்லாப் புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் இப்போது N.F.O. என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

நன்றி: நாணய விகடன்

தெரிந்து கொள்வோம் - I

ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் (Future Market): ஒருவகை கான்ட்ராக்ட் விற்பனை சந்தை. வரும் நாட்களில் இது விலை ஏறும் அல்லது இறங்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம். இது பங்குகளிலும், மல்ட்டி கமாடிட்டி சந்தையில் பொன், வெள்ளி முதல் மற்ற உலோகம், விவசாய விளைபொருட்கள் வரையிலும்கூட தற்போது நடக்கிறது.

இ.சி.எஸ்.: எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் (Electronic Clearing service) என்பதன் சுருக்கம். அதாவது, நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை வரவு வைப்பதையும், பற்று எழுதுவதையும் அவ்வப் போது எழுத்துப் பூர்வ அனுமதி மூலம் செய்யக் காத்திருக்காமல், கணினி மூலமாகச் செய்வது.

என்ட்ரி லோட் (Entry Load): ஆரம்ப கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தினுள் நுழைவதற்கான முதலீட்டுக் கட்டணம். பல நேரங்களில் இந்தக் கட்டணம் இருக்காது.

எக்ஸிட் லோட் (Exit Load): ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து வெளியேற நினைக்கும்போது, அதற்குச் செலுத்த வேண்டியிருக்கும் கட்டணம்.

கிரெடிட் ரேட்டிங் (Credit rating): கடன் கேட்டு அணுகும் ஒருவரது நிதிநிலையைப் பரிசீலித்து, அவரால் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்த இயலுமா என்பதை ஆய்வு செய்து அறிவிக்கும் முறை கிரெடிட் ரேட்டிங். இது நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கு, சிறு நடுத்தரத் தொழில் அமைப்புகளுக்கு என பலவற்றிலும் தற்போது அமலாக்கப்படுகிறது.

ஃப்ரன்ட் ஆபீஸ் (Front Office): சேவைத் தொழில் நிறுவனங்களில் வாடிக்கையாளரை நேருக்கு நேராகச் சந்தித்துப்பேசி அவருக்கு தேவையானவற்றைச் செய்து தரும் நிலையில் இருக்கும் அலுவலக அறை ஃப்ரன்ட் ஆபீஸ். இதற்கு மாறாக, வாடிக்கையாளரது தேவைகளை தொலைபேசி, இமெயில் போன்ற வகையில் அறிந்து அவர்களின் கண்முன் தோன்றாத நிலையில் இருந்து சேவைப் பணி செய்வது, பேக் ஆபீஸ் (Back office).

நன்றி: நாணய விகடன்.

பங்குச்சந்தை: காளை - கரடி அடையாளங்கள்

பங்குச்சந்தையில் முன்னேற்றம் இருந்தால் அதை காளைக்கும், வீழ்ச்சி அடைந்தால் கரடிக்கும் ஒப்பிடுகிறார்கள். முக்கியமாக பங்குத் தரகர்களை(Brokers) குறிப்பதற்காகவே இந்த அடையாளங்கள்னு படிச்சதா ஞாபகம். [உதாரணத்துக்கு ஹர்சத் மேக்தா]

காளை என்றால் பங்குகளின் விலை அதிகரிக்கும். அவரைத்தான் பங்குச்சந்தை காளை என்கிறார்கள்.


கரடி என்றால் பங்குகளின் விலை இறங்கும். இவர்களை பங்குச்சந்தை கரடிகள் என்கிறார்கள்.

இது பங்குச்சந்தையின் சூழ்நிலையை பொருத்து தரகர்கள் காளையாகவும், கரடியாகவும் 'மாறு'வதுண்டு.

சோதனை பதிவு

சோதனை பதிவு