Sunday, October 28, 2007

பங்குச்சந்தை - இலாபம்/நஷ்டம் எவ்வளவு? - II

முதல் பகுதி

அதாவது பங்குச்சந்தை 4.14 மடங்கு வளர்ச்சியில், நண்பரின் முதலீட்டின் வளர்ச்சியோ 0.5 மடங்கு. அவருடைய மதிப்பீட்டின்படி நல்ல வளர்ச்சி(!?). ஆனால் அவருடைய முதலீட்டை பங்குச்சந்தையின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்பொழுது குறைவு. பங்குச்சந்தையின் போக்கை பொருத்து தன்னுடைய 'portfolio' வை அவர் மாற்றிருக்க வேண்டும்.

ஃபாண்டுகளில் கிடைக்கின்ற தொகையுடன் ஒப்பிடும்பொழுது பெரிய வித்தியாசம் இல்லை. இதற்கு ரிஸ்க் உள்ள பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. பதிலாக ஃபாண்டுகளிலேயே முதலீடு செய்திருக்கலாம்.

மேலும் அவர் வருடத்திற்கு செலுத்திய டிமேட் (Demat) fee மற்றும் பங்குகளை வாங்கி,விற்பதற்கு கொடுக்கும் brokerage fee ம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நண்பருடைய முதலீடு 100 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பங்குச்சந்தையின் வளர்ச்சியான 414 சதவீதத்தைவிட குறைவுதான்.

நம்முடைய முதலீடும் (கிட்டத்தட்ட) பங்குச்சந்தையின் வளர்ச்சிக்கு நிகராக மாறவேண்டும். கிடைக்கின்ற இலாபத்தை வைத்தாவது இந்த சோதனை முயற்சியில் இறங்கலாம்.

பங்குச்சந்தையில் ஒரு வீழ்ச்சி ஏற்படும்பொழுது எப்படி நம்முடைய முதலீட்டுக்கும் வீழ்ச்சி ஏற்படுகிறதோ அதேபோல பங்குச்சந்தையில் ஒரு ஏற்றம் இருக்கும்பொழுது அது நம்முடைய முதலீட்டிலும் இருக்க வேண்டும் அல்லவா?.

எனக்கு தெரிந்தவரை ....ஆன் - லைன் வர்த்தகத்தில் "Portfolio Tracker" என்ற வசதியில்லை. இருந்திருந்தால் நம்முடைய பங்குகளின் இலாபம், நஷ்டங்களைப் பற்றி நமக்கு ஒரு தெளிவும், புரிதலும் கிடைத்திருக்கும்.

அ) நாம் வாங்கிய பொழுது பங்கின் விலை/தேதி
ஆ) விற்கும் பொழுது அதன் விலை/தேதி
இ) Brokerage மற்றும் Demat fee
ஈ) நிகர இலாபம்/நஷ்டம்

இந்த விவரங்கள் இருந்திருந்தால் நாம் வாங்கி, விற்கும் பொழுது நம்முடைய பங்கு எவ்வாறு செயல்பட்டது/செயல்படுகிறது [இலாபம் - நஷ்டம்] என்ற விவரங்கள் தெரியவரும்.

பங்கின் பெயர்
வாங்கிய தேதி
வாங்கிய விலை
விற்ற விலை
விற்ற தேதி
Brokerage/Demat fee.

மேலே குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் Excelல் பதிவு செய்தல் நலம்.

Wednesday, October 24, 2007

பங்குச்சந்தை - இலாபம்/நஷ்டம் எவ்வளவு? - I

நண்பர் ஒருவர்... எனக்கு பங்குச்சந்தை என்றால் என்னனு தெரிவதற்கு முன்னாலே பங்குச்சந்தையிலே முதலீடு செய்தவர். வருடம் 2002. அப்பொழுது பங்குச்சந்தை 3200 - 3500 புள்ளிகள் இருந்திருக்கும். "அதிகமா ஆசைபடாமல்", 50 சதவீதம் இலாபம் போதும் என்ற நோக்கில் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தார். வங்கி/தபால்துறை சேமிப்பை விட நல்ல இலாபம் என்பது அவருடைய கணக்கு. இப்பொழுது (5 வருடத்திற்கு பிறகு) ஒன்றரை இலட்சம் அவருடைய கணக்கில் இருக்கிறது. இப்படி நம்மில் பலபேருடைய மனநிலை...

ஆனால் இப்பொழுது பங்குச்சந்தையோ 18,000 புள்ளிகளை தாண்டிவிட்டது.

பங்குச்சந்தையின் வளர்ச்சியோ....

உயர்வு (அ) இலாபம் = (18000 - 3500 ) / 3500 = 4.14 அதாவது... 414 %

இந்த 5 வருடத்தில் பங்குச்சந்தை 414 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதே அளவில் இவருடைய முதலீட்டின் வளர்ச்சி இருந்திருந்தால்

இலாபம் = (414 - 50) / 50 = 7.28 அதாவது 728%

அதாவது ஒரு இலட்சம் ரூபாய் 728 % சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். கிட்டதட்ட ஏழு இலட்ச ரூபாய் அவரிடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய கணக்கின்படி அப்படி இல்லையே? ஏன்?

இப்பொழுது இன்னொரு கணக்கு....

அந்த ஒரு இலட்சத்தை நண்பர் வரி-விலக்கு பாண்டுகளில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். மூன்று வருடம் பணத்தை எடுத்திருக்க முடியாது. அதிகபட்சம் 6 % வட்டி கிடைத்திருக்கும். மூன்று வருடத்தில் 18 %. வரி (30%) கட்டதேவையில்லை . அதனால், சேமிப்பு = 30 + 18 = 48%.

அதாவது மூன்று வருடத்தில் 48%. வருடத்திற்கு 16% (48/3) இலாபம்.

ஆனால் பங்குச்சந்தையில் 5 வருடத்தில் அவருக்கு கிடைத்ததோ 50% . வருடத்திற்கு 10% (50/5) தான்.

நாம் முதலீடு செய்த பணம் நமக்கு வரும் என்று உத்திரவாதமில்லாத பங்குச்சந்தையைவிட எந்த ரிஸ்க்கும் இல்லாத பாண்டுகளில் அதே அளவு இலாபம் கிடைக்கிறது. எப்படி?

எங்கேயோ தப்பு இருக்கிறதா? பங்குச்சந்தையை பற்றி நமது புரிதலிலா அல்லது அதன் மதிப்பீட்டிலா?

(இன்னும் பேசலாம்)

Monday, October 22, 2007

Reliance Money - A (new) Financial Portal

ICICIDirect, Indiabulls , Sharekhan , Kotak securities, Indiainfoline , 5paisa.com இவர்களுக்கு போட்டியாக சமீபத்தில் Reliance Money . அதாவது பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள் (இன்னும் பல) முதலீடுகளை on-line மூலமாக செய்யலாம்.

சந்தைக்கு வந்து 6 மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்...Per transactionக்கு ஒரு பைசா என்ற புது வியாபார யுக்தியுடன் வந்தார்கள்....

அவர்களுடைய Brokerage fee structure:
Delivery trades – 0.05%
Non- delivery trades – 0.005%

Fixed brokerage fee:

Rs. 500 for delivery trades up to 10 lakh
Rs. 500 for non-delivery trades up to 1 crore.

Pre-paid coupon brokerage charges:

Rs. 500 coupon is valid for 2 months.
Rs. 1300 coupon is valid for 6 months.
Rs. 2500 coupon is valid for 1 year

ICICIdirect வுடன் ஒப்பிடும்பொழுது brokerage fee குறைவாகவே இருக்கிறது. நல்ல விசயம்தான்.

பங்குகளின் (விலை) விவரங்கள் நம் கைதொலைபேசியில் என 'கவர்ச்சி' இருந்தாலும்....தற்பொழுது செயல்படும் விதத்தினை கேள்விப்படும் பொழுது அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே தோன்றுகிறது...உ.தா: Customer Service.

அதனால் Reliance Moneyல் கணக்கு ஆரம்பிக்கும் நம்மவர்கள் பொறுத்திருந்து... ஆராய்ந்து முடிவு செய்யலாம்.

Saturday, October 20, 2007

பங்குச்சந்தை: அடுத்த வாரம் எப்படி இருக்கும்?

`அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்' என்பது பங்குச் சந்தைக்கு வெகுவாக பொருந்தும். கடந்த வாரத்தில் மட்டும் 1,500 புள்ளிகள் குறைந்துள்ளது. இதை வாய்ப்பாக கருதலாம்.

இந்திய பங்குச் சந்தை அடிப்படை நன்றாக உள்ளது. கம்பெனிகள் நன்கு செயல்படுகின்றன.

கடந்த ஒரு வாரமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வலுவிழந்து உள்ளதால், சாப்ட்வேர் பங்குகளின் விலைகள் கூடியுள்ளன. எனவே, நல்ல `ஏ' குரூப் பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். 100 சதவீதம் லாபம் எதிர்பார்க்காமல், 20 முதல் 30 சதவீதம் லாபம் எதிர்பார்த்து முதலீடு செய்பவர்களுக்கு பங்குச் சந்தை ஏமாற்றாது.

பங்குச் சந்தை மேடு, பள்ளங்கள் நிறைந்தது தான். அதில், பங்கு வாங்கி வெற்றி பெறுவது என்பது சிரமமான காரியமே. சந்தை மேலேயே சென்று கொண்டு இருக்கையில் (அதாவது ரோடுகளில் ஒரு இறக்கம் வரும் போது, வண்டியை நாம் மிதிக்காமலேயே வேகமாகச் செல்லுமே அது போலத்தான்) நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே சமயம், மேடு வரும் போது வருத்தப்படுகிறோம். `இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்' என்ற பாடலை பாடியபடி பங்குச் சந்தையை அணுக கற்றுக் கொள்ளுங்கள்; நன்றாக பயணிக்கலாம். முடியாதவர்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து கவலைப்படாமல் இருக்கலாம்.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்:

நல்ல காலாண்டு முடிவுகள் குறைந்து வரும் பணவீக்கம் என இருந்தும், அடுத்த வாரம் பங்குச் சந்தையின் போக்கு செபி எடுக்கப் போகும் முடிவுகளை பொறுத்தே அமையும்.

----
நன்றி: தினமலர்
சாதனைகள்... சோதனையாகி வேதனையானது தான் மிச்சம் - சேதுராமன் சாத்தப்பன்

Tuesday, October 16, 2007

சபாஷ், பங்குவணிகம்!

எப்பொழுதாவது சாட்டில் வரும் நான், இன்று (மங்களூர்) சிவா வந்து 'ஹலோ' சொல்ல நலம் விசாரிப்புக்கு பின்..... ஒரு பெரிய 'குண்டை தூக்கி' போட்டார். 'பங்குச்சந்தை 1500 புள்ளிகள் அடி'னு சொல்ல......... தட்டச்சு பிழையோனு நினைச்சி 'என்னது' கேக்க... 'ஆமாங்க... பங்குச்சந்தை வேலையை ஒரு மணி நேரம் நிறுத்தி வைச்சிருக்காங்க'னு சொல்லிட்டு அப்புறமா பார்க்கலாம்னு போயிட்டாரு...

... அடி விழும்னு எதிர்பார்த்ததுதான்.. ஆனா... இந்தளவுக்கு விழும்னு எதிர்பார்க்கலை...

சரினு CNBC TV 18 பார்க்க.... இந்திய பங்குச்சந்தைக்கு ஒரு கருப்பு தினம்தான்.

இந்தளவுக்கு புள்ளிகள் சரிய என்ன காரணம்...
நமது பங்குச்சந்தைக்கு அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் (FII) பணம் வரும் வழிகளில் ஒன்றான Participatory notes [P-Notes] மீது கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என SEBI ஒரு proposal கொண்டு வருவதாக இருக்கிறது.

சரி.... முதல் (பெரிய) ஐந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் யாரு..

அ) மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley)
ஆ) மெரில் லின்ச் (Merrill Lynch Capital Markets Espana)
இ) சிட்டி குரூப் (Citigroup Global Markets)
ஈ) கோல்ட்மேன் சாக் (Goldman Sachs)
உ) CLSA மெர்சண்ட் (CLSA Merchant Bankers)

பின் நமது நிதி அமைச்சர், ப.சி சில விசயங்களை 'தெளிவு படுத்த' (...said that the Sebi move was to moderate capital flow through PNs and there is no reason to panic. Sebi has taken a good decision in the interest of long term investors and capital markets)... ..

அதற்குபின் 10:55க்கு ஆரம்பித்த பங்குச்சந்தையில் 'கொஞ்சம்' ஆறுதலான செய்தியை பார்க்க முடிந்தது.

SEBI இதை சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தால் இந்தளவுக்கு அடி விழுந்திருக்காது என்றே தோன்றுகிறது.

நான் தினமும் படித்துவரும் பங்காளியின்(!!) பங்குவர்த்தகம் பார்த்த பொழுது அவருக்கு ஒரு பூச்செண்டு கொடுக்க வேண்டும் என்றே தோன்றியது... அவருடைய இந்த பதிவில் அவருடைய அனுபவம் தெரிந்தது... துல்லியமான கணிப்பு!!

தவறாமல்..தினமும் வணிக குறிப்புகொடுக்கும் அவருக்கு ஓ.. ஓ..ஓ....!!

Friday, October 12, 2007

பங்குகளை வாங்கும் நேரமா... விற்கும் நேரமா?

‘‘சந்தை இப்போது 16500 புள்ளிகளைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. இது வாங்கும் நேரமா... விற்கும் நேரமா?’’

சிலர், ‘‘வாங்கும் நேரம்’’ என்றார்கள். சிலர், ‘‘இல்லையில்லை, புள்ளிகள் உயரும்போது லாபத்தைப் பணமாக்க பங்குகளை விற்றுவிட வேண்டும். அதனால், இது விற்கும் நேரம் தான்’’ என்றார்கள்.

விற்கும் நேரம்தான் என்றவர்களிடம் ரங்கஸ்வாமி கேட்டார்: ‘‘நல்லது, உங்கள் பங்குகளை யாரிடம் விற்பீர்கள்?’’ என்றார். லேசாகப் புரிந்தது போல முதலீட் டாளர்கள் பார்க்க, ‘‘பங்குகளை விற்க வேண்டுமானால் சந்தையில் யாராவது வாங்க வேண்டுமல்லவா... ஆக, வாங்கும் நேரம், விற்கும் நேரம் என்று சந்தையில் எதுவும் கிடையாது’’ என்றார்.

‘‘அப்படியானால், பங்கை எப்போது விற்பது? பங்கை வாங்கும்போது ஓர் இலக்கோடு வாங்க வேண்டும். இந்த அளவுக்கு விலை ஏறினால், விற்று விடவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். அது வந்தவுடன் விற்றுவிட்டு வெளியேறி விட வேண்டும். அதேபோல, வாங்குபவரும் இப்போதைய விலையைவிட இன்னும் உயரும் என்ற நம்பிக்கை இருந்தால் வாங்க வேண்டும். இதுதான் சூட்சுமமே தவிர, சந்தையில் எந்த மந்திரமும் இல்லை’’ என்றார்.

சொன்னவர்: பிரபல முதலீட்டு ஆலோசகரான ரங்கஸ்வாமி

***

‘‘ரிட்டர்ன் ஆன் நெட்ஒர்த் (RNOW-ReturN On net Worth) அடிப்படையில் ஒரு பங்கைத் தேர்ந்தெடுத்தால் அதிக வருமானம் கிடைக்குமா?

‘‘அருமையான கேள்வி! ‘ஷேர் மார்க்கெட் சிங்க’மான வாரன் பஃபெட், ஆர்.என்.ஓ.டபிள்யூ&க்கு அதிக முக்கியத் துவம் கொடுத்துதான் பங்குகளைத் தேர்வு செய்கிறார். அதாவது, ஆர்.என்.ஓ.டபிள்யூ. அதிகமாக இருக்கும் நிறுவனம் சிறப்பாக வர்த்தகத்தை நடத்தி வருகிறது என்று அர்த்தம். ஒரு நல்ல பங்கைத் தேர்வு செய்ய உதவும் முக்கியமான அளவு கோல்களில் ஒன்று இந்த ஆர்.என்.ஓ.டபிள்யூ!"

@@@

நன்றி: நாணய விகடன்

Thursday, October 11, 2007

Rich Dad, Poor Dad - I

Robert T Kiyosaki யின் 'Rich Dad Poor Dad' படிச்சிருக்கீங்களா? ஆறு வருடத்திற்கும் மேலாக 'The New York Times' ல் முதல் இடத்தில் இருக்கும் புத்தகம். ஏதோவொரு வலைப்பூவில்கூட படித்ததாக நினைவு!

இந்த புத்தகம், அவரை 'எங்கேயோ' போய் நிறுத்த அதற்கப்புறம் அதேபோல் பல புத்தகம் எழுதியுள்ளார். (Rich Woman, Rich Dad Poor Dad for teens, Rich Kid Smart Kid, Retire Young Retire Rich........ இப்படி பல புத்தகங்கள்)

அதிலிருந்து 'சுட்ட'வைகள்......

Poor Dad: "The love of money is the root of all evil."
Rich Dad: " The lack of money is the root of the evil."

Poor Dad: "Study hard so you can find a good company to work for."
Rich Dad: " Study hard so you can find a good company to BUY."

Poor Dad: "The reason I'm not rich is because I have you kids."
Rich Dad: " The reason I MUST BE rich is because I have you kids."

Poor Dad: "When it comes to money don't take risks."
Rich Dad: "Learn to manage risks."

Poor Dad: "Work for benefits."
Rich Dad: "Be totally self reliant financially."

Poor Dad: "Save."
Rich Dad: "Invest."

Poor Dad: "Write a good resume to find a good job."
Rich Dad: "Write a strong business and financial plan to create a good company."

Wednesday, October 10, 2007

பான் கார்டு எண் (PAN Card) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

கேள்வி: ‘மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும் என்றால், பான் எண் கேட்கப்படுகிறது. ஏற்கெனவே முதலீடு செய்தவர்களும் பான் எண் கார்டு வாங்க வேண்டி வருமா?'

பதில்: ‘‘ஏற்கெனவே முதலீடு செய்துள்ளவர்களிடம் பான் விவரத்தைத் தெரிவிக்கும்படி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கேட்டு வருகின்றன. யூனிட்களை விற்றுவிட்டு வெளியேறும்போது பான் எண்ணைக் கொடுக்கவேண்டி வரும். எனவே, அதற்கு இப்போதே தயாராகிவிடுவது நல்லது. பான் கார்டு இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்க விண்ணப்பித்திருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சிறு முதலீட்டாளர்கள் அதுவும், எஸ்.ஐ.பி. முறையில் விண்ணப்பம் செய்திருந்தவர்கள்தான்."


கேள்வி: ‘‘பான் கார்டு எண்ணைக் குறிப்பிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். ஆனால், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லை. ஏதாவது சிக்கல் வருமா?"

பதில்: ‘‘உங்கள் வருமானம், வருமான வரி அடிப்படை வரம்பைத் தாண்டும்போதுதான் வருமான வரி கணக்கு விவரத்தைத் தாக்கல் செய்யவேண்டும். பான் கார்டு எண்ணை முதலீடுக்காக குறிப்பிடுவதற்கும் அதற்கும் தொடர்பு இல்லை. வருமான வரி கட்டும்பட்சத்தில் பான் கார்டு வாங்குவது அவசியம்."

கேள்வி: ‘‘மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் (Capital Gain Tax) எந்தத் தொகைக்கு கட்டவேண்டும்?"

பதில்: ‘‘ஒரு ஆண்டுக்குள் ஒரு முதலீட்டை வாங்கி, விற்று அதில் லாபம் பார்த்தால் ஷார்ட் டேர்ம் (குறுகிய கால) கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் செலுத்த வேண்டும். அதுவே, ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருந்து விற்கும்போது லாங் டேர்ம் (நீண்ட கால) கேப்பிடல் கெயின் டேக்ஸ் எனப்படுகிறது. இதற்கு வரி செலுத்தத் தேவையில்லை"

கேள்வி: ‘‘சென்செக்ஸ் ஏற்றம் & இறக்கம், இதில் எந்தச் சமயத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது?"

பதில்: ‘‘மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி. முறைதான் சிறந்தது. சந்தை ஏறி-&இறங்கினாலும் விலை மாற்றத்தை அது சமன் செய்கிறது. சந்தையின் போக்கை வைத்து முதலீடு செய் யும் கவலையை ஃபண்ட் மேனேஜரிடம் விட்டு விட்டு நிம்மதியாக இருங்கள்"

கேள்வி: ‘‘அதிக என்.ஏ.வி&யை விட குறைவான என்.ஏ.வி. உள்ள திட்டங்களையே பலரும் தேடுகின்றனர். அது தான் சரியான முடிவா?"

பதில்: ‘‘இந்த இரண்டுமே ஒன்றுதான். மதிப்பில் மட்டுமே வித்தியாசப்படுகிறது. திட்டத்தின் வளர்ச்சி விகிதம்தான் கணக்கிடப்பட வேண்டிய விஷயம். பத்து ரூபாய் திட் டம் பதினோரு ரூபாய் ஆவதும் நூறு ரூபாய் திட்டம் 110 ரூபாய் ஆவதும் ஒரே அளவான வளர்ச்சி விகிதம் தான். ஆனால், 110 ரூபாய் என்பது அதிக வளர்ச்சியாக வும், 11 ரூபாய் குறைந்த வளர்ச்சியாகவும் தோன்றும். ஆனால், இந்த இரண்டின் வளர்ச்சி விகிதமும் 10% என்ற ஒரே அளவுதான். எனவே, வளர்ச்சி விகிதத்தைத் தான் அளவுகோலாக வைத்துக்கொள்ள வேண்டும். விலையை அல்ல"


நன்றி: நாணய விகடன்!

Thursday, October 4, 2007

பங்குச்சந்தை 18 ஆயிரத்தை நோக்கி....

பங்குச்சந்தை 16,000 புள்ளிகளை தாண்டிய வேகத்தில், 18,000 புள்ளிகளை நோக்கி காளை பாய்ச்சலாக இருக்க, ஒரு பக்கம் நல்லதாக பட்டாலும், சிறிய மற்றும் புதிய முதலீட்டார்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் என்றே 'பச்சி' சொல்கிறது. முடிந்தவரை இலாபமுள்ள பங்குகளை விற்று காசு பார்ப்பது நல்லதாகவே படுகிறது. விலை குறையும் போது மீண்டும் அதே (நல்ல) பங்குகளை வாங்குவது நலம்.

நேற்று நிதி அமைச்சர் சிதம்பரம் நிருபர்களிடம் பேசுகையில்,

"பங்குச்சந்தை 18 ஆயிரத்தை நோக்கி நெருங்கி கொண்டு இருக்கிறது.இந்த சமயத்தில் சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். அவர்கள் இந்த நிலையில் பங்குச்சந்தைக்குள் நுழைவது சரியாக இருக்காது. அவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய அதீத ஆர்வம் காட்டுகின்றன. இதை வரவேற்காமல் இருக்க முடியாது."

போன மாதம் மட்டும் (செப்டம்பர் '07) வெளிநாட்டு நிறுவனங்கள் [FII] 19,000 கோடி ரூபாய் (அதாவது, 190 பில்லியன் ரூபாய்) இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளார்கள்.இந்த காளை பாய்ச்சலுக்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனா இந்த மாதிரி அதிரடியா மேல போன, ரொம்ப இலாபம் வரும்னு 'பேராசை' படாம நல்ல பங்குகளை கணிசமான இலாபத்தில் விற்று விடுதல் நல்லது.

சில பங்குதரகர்கள் 18000 புள்ளிகளை இந்த மாதத்திற்குள் தொட்டுவிடும் எனவும், சிலர் மீண்டும் 16000 புள்ளிகள் வந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் 'கணிக்கிறார்கள்'.

இனி வரும் நாட்களில், சந்தையை பொறுத்தவரையில் மிகவும் ஆவலுடனும், எச்சரிக்கையுடனும் கவனித்து வருதல் நலம். அப்பொழுதுதான் ஒரு சரிவு வரும்பொழுது எந்த பங்குகளை மீண்டும் வாங்கலாம்/விற்கலாம் என்ற "தெளிவு" பிறக்கும்!!

Wednesday, October 3, 2007

அமெரிக்க டாலர் வீழ்ச்சியில் இருந்து தொழிலை காப்பாற்றுவது எப்படி? - சேதுராமன் சாத்தப்பன்

அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக தமிழக ஏற்றுமதியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஏன் கூடுகிறது என்பதை நாம் உணர்ந்திருந்தால் சிறிது அபாயத்தை தடுத்திருக்கலாம். அதிக லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கமும் ஒரு காரணம்.

சென்ற வருடம் வரை ஆடை தயாரிப்பாளர் நான்கு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் வரும் சரக்கை அப்போதைய அமெரிக்க டாலரில் கூறும்போது 10,000 டாலர் என்று கூறி வியாபாரம் செய்வார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த சரக்கை இரண்டு மாதத்திற்குள் அனுப்ப வேண்டும் என்றும், சரக்கு அனுப்பிய பின்பு தான் பணம் வரும். இது போன்ற சமயங்களில் அவர் இறக்குமதியாளருடன் போட்ட ஒப்பந்தத்தின்படி கிடைக்கப் போகும் 10,000 டாலருக்கு 4,55,000 பக்காவாக கிடைக்க வகை செய்யுமாறு வங்கியுடன்ஒரு பார்வர்டு கான்ட்ராக்ட் போடலாம்.

அதாவது வங்கியில் எனக்கு இந்த தேதியில் அல்லது இந்த மாதத்தில் 10,000 டாலர் வரப் போகிறது என்று கூறினால் வங்கி அவருக்கு இவ்வளவு ரூபாய் தருவதாக ஒத்துக் கொள்ளும் (அந்த தினத்தில் டாலரின் மதிப்பு எப்படி இருந்தாலும்) டாலரின் மதிப்பு காலம் காலமாக கூடி வந்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் அப்படி பார்வர்ட் கான்ட்ராக்ட் போடாமல் டாலர் வரும் தினம் என்ன மதிப்பு இருக்கிறதோ அதை வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள். இது தான் பலரை தற்போது நஷ்டப்படுத்துகிறது.ஆனால், தற்போது இருக்கும் சூழ்நிலை சிறிது வேறுபட்டுள்ளது.

அதாவது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கூடியுள்ளதால் பல வெளிநாடுகளில் இருந்து நம்மிடம் சரக்குகள் வாங்காத அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது முன்பு ஒரு டாலர் விலை சொல்லிய சட்டையை, தற்போது ஏற்றுமதியாளர் ஒரு டாலர் 15 சென்ட் என்று சொல்ல வேண்டிய நிலை. ஆதலால், வேறு நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர் சிறிது விலை குறைவாக கூறினால் அவரிடம் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் பல ஆர்டர்கள் வராமல் போகும்.என்ன இருந்தாலும் டாலரின் மதிப்பு ரூ. 40க்கு கீழ் வராது என்ற எண்ணம் பல ஏற்றுமதியாளர்களுக்கு இருந்து வந்தது. ஆனால், சென்ற வாரம் ரூ.40க்கும் கீழேயும் சென்று ஏற்றுமதியாளர்களை கதிகலங்கச் செய்து விட்டது.குறையும் டாலரின் மதிப்பு எல்லாரையும் பாதித்துள்ளதா?

இந்தியாவில் பல ஏற்றுமதி பொருட்கள், இறக்குமதியை நம்பி உள்ளது. அதுபோன்று இறக்குமதியை நம்பி இருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு அதிகம் பாதிப்பு இல்லை. ஏனெனில், அவர்களின் இறக்குமதி செலவும் தற்போது பெருமளவில் குறைந்து உள்ளதே, அதனால் தான் (குறிப்பாக வைரம், தங்கம், ஏற்றுமதியாளர்கள்). மற்றபடி எல்லா இறக்குமதியாளர்களுக்கும் இந்த வருடம் முழுவதும் பண்டிகை காலம் தான். குறிப்பாக அரசாங்கத்தின் ஆயில் கம்பெனிகளுக்கு அவர்களின் ஆயில் இறக்குமதி செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் இருந்து வெளிநாடு சுற்றுலா செல்பவர்களுக்கு செலவுகள் குறையும்.ஏன்?

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் இந்தியாவிற்கு பணம் அனுப்புகிறார்கள். ஏன் அவர்கள் அங்கே வைத்துக் கொள்ளலாமே என்று நினைக்கிறீர்களா?

அங்கு அதிகம் வட்டியோ, வருமானமோ கிடைக்காதது தான் காரணம்.ண பங்குச் சந்தைக்கு வெளிநாட்டுப் பணம் அதிக அளவில் வருகிறது. இது ஒரு முக்கியமான காரணம். இந்தியப் பங்குச் சந்தை, தற்சமயம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதால் இங்கு முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டலாமே என்ற எண்ணம் தான்.சமீபத்தில் முடிவடைந்த அரசாங்க வெளியீடான பவர் கிரிட் கார்ப்பரேஷனில் முதலீடு செய்ய வெளிநாட்டு கம்பெனிகள் 400 கோடி டாலர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இதுபோல புதிய வெளியீடுகளில் முதலீடு செய்யவும், செகண்டரி மார்க்கெட்டில் முதலீடு செய்யவும் பல மில்லியன் டாலர்கள் இந்தியாவிற்குள் வருகிறது. இந்த அதிகப்படியான வரத்து டாலர் மதிப்பை குறைக்கிறது.உங்கள் ஊருக்கு ஒரு நாளைக்கு ஐந்து லோடு தக்காளி போதும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு நாளில் பத்து லோடு தக்காளி வந்தால் விலை என்ன ஆகும். நேற்றைய விலையை விட பாதியாகும் அல்லவா? அதே போலத்தான், டாலர் சந்தையும், தேவைக்கு அதிகமாக டாலர் உள்ளே வர வர, அதன் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.

ஏன் அரசாங்கம் தலையிடவில்லை?

முன்பெல்லாம் டாலரின் மதிப்பு குறையும் போதெல்லாம் ரிசர்வ் வங்கி மார்க் டாலர்களை வாங்கும். டாலரின் மதிப்பு தூக்கும். ஏற்றுமதியாளர்கள் காப்பாற்றப்பட்டு வந்தனர். அதே சமயம் ஒவ்வொரு முறை டாலர் மதிப்பு கூடும் போதும் அரசாங்கம் பெட்ரோல் விலையை கூட்டி வந்தது. இது பண வீக்கத்தை ஏற்படுத்தியது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி தற்போது டாலர் மார்க்கெட்டில் நுழைவதே இல்லை. இதனால், ஆண்டு ஆரம்பத்தில் ஆறு சதவீதமாக இருந்த பண வீக்கம் தற்போது 3.23 சதவீதமாக இந்த வாரம் குறைந்துள்ளது. பண வீக்கம் குறைந்துள்ளதே என்று பையை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கச் சென்றால், கடைகளில் விலைகள் குறையவே இல்லை. முன்பெல்லாம் மூன்று ரூபாய் எடுத்துக் கொண்டு சென்றால் பை நிறையக் காய்கறி வாங்கி வருவாராம் எனது அப்பா. இப்போதும் அதே மூன்று ரூபாய்க்கு பை நிறைய வாங்கி வரலாம். ஆனால், சட்டைபையின் பை நிறைய.

ஒரே ஒரு மன நிறைவுவேறு பல நாடுகளிலும் இதுபோல டாலருக்கு எதிரான அவர்கள் நாட்டின் கரன்சியின் மதிப்பும் கூடி வருவதால் அது நமக்கு ஒரு பெரிய மன நிறைவு தரும் விஷயம். இந்தியாவில் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கவில்லை. இல்லாவிடில் 11 சதவீத இந்திய ரூபாய் உயர்வுக்கு நமது ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்.

ரூபாய்க்கு எதிராக மற்ற முக்கியமான கரன்சிகளின் மதிப்பு எப்படியுள்ளது?

யூரோ 56.580, பிரிட்டிஷ் பவுண்ட் 81.15, சுவிஷ் பிராங் 36.06, ஜப்பான் யென் 34.59, கனடா டாலர் 40.05.

மற்ற கரன்சிகள் ரூபாய்க்கு எதிராக சிறிது கூடியுள்ளது. (கடந்த ஒன்பது மாத நிலவரத்தை வைத்து பார்க்கும் போது).

மற்ற நாடுகளில் டாலருக்கு எதிரான அவர்கள் நாட்டின் கரன்சி மதிப்பு எப்படி உள்ளது?

சிங்கப்பூர் 5.7 சதவீதமும் , மலேசியா 5.3 சதவீதமும் ,சீனா 5.6 சதவீதமும் , ஜெர்மனி 11.2 சதவீதமும் , சிலி 3.1 சதவீதமும் , தாய்லாந்து 16.7 சதவீதமும் , கனடா 11.4 சதவீதமும் , பிரேசில் 14.8 சதவீதமும் , கொரியா 3.6 சதவீதமும் , இந்தியா 11.3 சதவீதமும் , போலந்து 13.7 சதவீதமும் , யூ.கே. 8.8 சதவீதமும் , ஹங்கேரி 15.6 சதவீதமும் ,

ஆஸ்திரேலியா 14.3 சதவீதமும் கரன்சி மதிப்பு கூடியுள்ளது . மேலும் தைவான் 1.2 சதவீதமும் , அர்ஜெண்டினா 3.9 சதவீதமும் , மெக்சிகோ 0.3 சதவீதமும் , தென் ஆப்ரிக்கா 2.4 சதவீதமும் , ஹாங்காங் 0.0 சதவீதமும் கரன்சி மதிப்பு குறைந்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

*சாப்ட்வேர் ஏற்றுமதியாளர்கள்.

* கார்மென்ட் ஏற்றுமதியாளர்கள்.

*விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.

*லெதர் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.

*கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.

*மற்றும் இறக்குமதியை நம்பி இருக்காத எல்லா துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களும்.

ஏற்றுமதியாளர்கள் என்ன செய்ய வேண்டும்

*உங்கள் கம்பெனியின் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

*உள்நாட்டில் நீங்கள் வாங்கும் பொருட்கள் எதையாவது இறக்குமதி செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படி முடிந்தால் அதை கட்டாமல் இறக்குமதி செய்து உபயோகிக்க வேண்டும். அப்படியானால் அடக்க விலை குறையும்.

*பார்வர்ட் கான்ட்ராக்ட் கட்டாயம் போட வேண்டும் (மிகச் சமீபத்தில் டாலரின் மதிப்பு ரூ.42 வரை சென்றது. அப்போதெல்லாம் ஏற்றுமதியாளர்கள் பார்வர்ட் கான்ட்ராக்ட் போட மனது வரவில்லை. இன்னும் கூடும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்)

*ஏற்றுமதி பொருளுக்கான விலை வேறு கரன்சியில் நிர்ணயிக்க முயல வேண்டும். அதாவது யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற கரன்சிகளில். இந்திய ரூபாய்க்கு எதிராக யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் ஆகிய கரன்சிகள் வலுவாகவே இருக்கிறது.

*நீங்கள் உங்களது ஏற்றுமதிக்கான பணத்தை ரூபாயாகவும் பெறலாம் (இதை அரசாங்கம் அனுமதிஅளித்துள்ளது). உங்களது சரக்குகளை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் அவ்வாறு செய்யலாம்.

அரசாங்கம் என்ன செய்துள்ளது?

தொடர்ந்து வீழும் டாலரின் மதிப்பு அரசாங்கத்தின் தூக்கத்தை தொலைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பின் மதிப்பு (இந்திய ரூபாயில்) மிக அதிகமாக வீழ்ந்துள்ளது.

டாலரின் மதிப்பு ரூ. 40க்கு கீழே சென்றதும், ரிசர்வ் வங்கி டாலர் மதிப்பை தூக்கி நிறுத்த பல புதிய முயற்சிகளை எடுத்தது.

*தனிப்பட்ட நபர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய இருந்த உச்ச வரம்பான 1,00,000 டாலரை, 2,00,000 டாலராக உயர்த்தியுள்ளது. அதாவது நீங்கள் 2,00,000 டாலர் வரை வெளிநாடுகளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். வீடு வாங்கலாம், வங்கிகளில் போட்டு வைக்கலாம். மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.

*இந்திய கம்பெனிகள் வெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ள கடன்களை திருப்பி செலுத்த 500 மில்லியன் டாலர்கள் வரை யாருடைய அனுமதியும் பெற வேண்டாம்.

*இந்திய மியூச்சுவல் பண்டுகள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளினால் டாலர் மதிப்பு கூடும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

இதனால் பலன்கள் இருக்குமா?

அதிகப்படியான டாலர் நாட்டின் உள்ளே வருவதால், பலன்கள் குறைவாகவே இருக்கும்.

இந்திய முதலீடுகளே அதிகம் வருவாயைத் தருவதால் ஏன் வெளிநாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம்.இந்த வருடம் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 1100 கோடி டாலர்கள் பங்கு சந்தை முதலீட்டிற்காக வந்துள்ளது. கடந்த முழு வருடத்திலேயே 900 கோடி டாலர்கள் தான் வந்திருந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்திய சந்தை முதலீட்டிற்கு பிரகாசமாக உள்ளது என்று.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

அரசாங்கம் சில சலுகைகளை கொடுத்திருந்தாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொரி தான். இந்தியா மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. ஏற்றுமதியை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆதலால், இன்னும் சிறிது சலுகைகளை அதிகப்படுத்தி ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும். கொடுத்துள்ள 1400 கோடி சலுகை போதாது என்று ஏற்றுமதியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த வருட ஏற்றுமதி குறியீடான 16000 கோடி டாலரை அடைய முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான்?

நன்றி: தினமலர்