Thursday, September 18, 2008

குழந்தைகளுக்கான சேமிப்பு வழிகள்

'இந்தப் பிள்ளைகளைக் கரைசேர்க்க ஒரு வழி பண்ணிட்டாப் போதும்...' என்பதுதான் இந்தியப் பெற்றோர்களின் உச்சகட்ட கவலையாக இருக்கிறது. தங்களின் ஓய்வுக் காலத்துக்குச் சேமிக்கிறார்களோ இல்லையோ.. தங்கள் மகள் மற்றும் மகன்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுக்கு எப்பாடுபட்டாவது சேமிப்பதை ஒரு தவமாகவே கொண்டிருக்கிறார்கள். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் கடமை இன்னும் பல மடங்கு கூடிவிடுகிறது.

''ஒரு பிள்ளைக்கு இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை முடிக்க இப்போது சுமார் 7 லட்ச ரூபாய் செலவாகும். இதுவே, இன்னும் 15 ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போது சுமார் 30 லட்ச ரூபாய் இருந்தால்தான் நிலைமையைச் சமாளிக்கமுடியும். அந்த அளவுக்கு பணவீக்க விகிதம் மற்றும் கல்விச் செலவுகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. முறையாகத் திட்டமிட்டு குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொண்டு வந்தால், அனைத்தையும் சுலபமாகச் சமாளிக்கலாம்'' என்கிறார், மதுரையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு.

அவரே தொடர்ந்து, ''குழந்தை பிறந்த உடனே அதற்காகச் சேமிக்க ஆரம்பிப்பதுதான் சிறந்தது. ஒரு தம்பதி, குழந்தை பிறந்த உடன் மாதம் தோறும் எஸ்.ஐ.பி. முறையில் 2,000 ரூபாய் முதலீடு செய்துவருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால் 17 வயதில் அந்தப் பிள்ளை கல்லூரிக்குப் போகும்போது அது 16.70 லட்சம் ரூபாயாகப் பெருகியிருக்கும். அதுவே, குழந்தை பிறந்து ஓராண்டு கழித்து முதலீட்டைத் தொடங்கி இருந்தால், அத்தொகை 14.30 லட்ச ரூபாயாகத்தான் இருக்கும். அதாவது, முதலீட்டில் 24 ஆயிரம் ரூபாய்தான் குறைந்திருக்கும். ஆனால், வருமானத்தில் 2.40 லட்ச ரூபாய் குறைந்து போயிருக்கும். எனவே, எவ்வளவு இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிக்கிறீர்களோ, அதற்கு ஏற்ப அதிக தொகை கிடைக்கும்'' என்றார்.

கோவர்தனன் பாபு சொன்னது போல குழந்தைகளுக்காகச் சேமிக்கும் ஆட்கள் யார் என்று தேடியபோது சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேஷ் சிக்கினார்.

''வெங்கடேஷ் மட்டுமல்ல... பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறாக இது இருக்கிறது. குறைவான வருமானத்தைக் கொடுத்து வந்தாலும், சில்ரன்ஸ் பிளான்கள் என்று இருக்கிற மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்ஷூரன்ஸ் திட்டங்களைத்தான் தேர்வு செய்துவருகிறார்கள். இப்படி தேர்ந்தெடுப்பதைவிட நல்ல ரிட்டர்ன் தரக்கூடிய திட்டங்களைத் தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும்'' என்றதோடு, ஒருவர் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
''ஒருவரின் மாதச் சம்பளத்தில் அவரின் செலவு மற்றும் இதர வாய்ப்பு வசதிகளைப் பொறுத்து 25-40% வரை சேமிக்கமுடியும். அனைவருக்குமான பொதுவான ஃபார்முலா சம்பளத்தில் சேமிப்பு என்பது 30% ஆக இருக்கிறது. இந்த சேமிப்புத் தொகையில் குழந்தைகளில் எதிர்காலத்துக்காக 60%-ஐ சேமிப்பது நல்லது. பெண் குழந்தை என்கிறபோது சேமிப்பைச் சற்று அதிகரிப்பது அவசியமாக இருக்கிறது. இது எதற்கு சொல்லி விளக்க வைக்கத் தேவையில்லை..!'' என்றவர், சேமிப்பை எப்படி முதலீடாக்குவது என்பதைப் பற்றிச் சொன்னார்.


''குழந்தையின் வயது 10-12-க்கு கீழ் இருக்கும்போது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவரவேண்டும். 12 வயதுக்கு மேல் ஆகும்போது, ரிஸ்க் இல்லாத, அதே நேரத்தில் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைத் தரும் 'ஃபிக்ஸட் மெச்சூரிட்டி மியூச்சுவல் ஃபண்ட்' திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டையும் தேர்வு செய்யலாம். ஆனால், வரிக்குப் பிந்தைய லாபத்தை கருத்தில் கொண்டால் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டங்கள் லாபகரமானவை...!'' என்றவர், இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

''பிராக்டிக்கலாக யோசித்தால் பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்காக இன்ஷூரன்ஸ் திட்டங்களை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. சிறு குழந்தைகளுக்கு காப்பீடு தேவையில்லாத ஒன்று. இதற்குப் பதில் முழுமையான முதலீட்டுத் திட்டத்தில் பணத்தைப் போட்டுவந்தால் அவர்களுக்கான தேவையைச் சுலபமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். மேலும், பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கான முதலீட்டை பெற்றோர்களின் பெயரிலே எடுப்பதுதான் நல்லது'' என்றார்.

சென்னை வடபழனியை சேர்ந்த பி.டி.மஹாராஜன் தொழிலதிபராக இருக்கிறார். அவர், ''பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் போன்ற செலவுகளுக்காகத் திட்டமிடுவது மட்டுமல்ல... அவர்களுடைய தனிப்பட்ட விருப்பங்களையும் தெரிந்து அதற்கு ஏற்பவும் செயல்பட வேண்டும். என் மகள்கள் காவியா யும், அனன்யாவும் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்பவும் இப்போதே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீட்டைச் செய்து வருகிறேன்'' என்றார்.

மஹாராஜனின் பாதை தெளிவாக இருப்பதாகப் பாராட்டிய கோவர்தனன் பாபு, ''அதிக ரிஸ்க் உள்ள பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்துவரும் நிலையில், பணம் தேவைப்படும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் அதனை ரிஸ்க் குறைவாக உள்ள அல்லது ரிஸ்க் இல்லாத திட்டங்களுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்கள் அல்லது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். அப்போது ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சந்தை சரிந்திருந்தால், அது சரியாகும் வரை காத்திருந்து முதலீட்டை மாற்றுவதுதான் லாபகரமாக இருக்கும்'' என்றார்.

பொதுவாக பெற்றோரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்துதான் முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். சிறிது, நடுத்தரம், அதிக ரிஸ்க் என்று மூன்று வகையாக எடுத்துக் கொள்ளலாம். ரிஸ்க் இல்லாத திட்டங்களாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன. சிறிது ரிஸ்க் உள்ள திட்டங்களாக கடன் சார்ந்த பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. நடுத்தர அளவு ரிஸ்க் கொண்ட திட்டங்களாக பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும்,. அதிக ரிஸ்க் கொண்ட திட்டங்களாக பங்கு மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில், எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும் என்றால், நாம் செய்யும் முதலீடு தெளிவானதாக இருக்கவேண்டும். திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!


 நன்றி: நாணய விகடன்

0 comments: