அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக தமிழக ஏற்றுமதியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஏன் கூடுகிறது என்பதை நாம் உணர்ந்திருந்தால் சிறிது அபாயத்தை தடுத்திருக்கலாம். அதிக லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கமும் ஒரு காரணம்.
சென்ற வருடம் வரை ஆடை தயாரிப்பாளர் நான்கு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் வரும் சரக்கை அப்போதைய அமெரிக்க டாலரில் கூறும்போது 10,000 டாலர் என்று கூறி வியாபாரம் செய்வார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த சரக்கை இரண்டு மாதத்திற்குள் அனுப்ப வேண்டும் என்றும், சரக்கு அனுப்பிய பின்பு தான் பணம் வரும். இது போன்ற சமயங்களில் அவர் இறக்குமதியாளருடன் போட்ட ஒப்பந்தத்தின்படி கிடைக்கப் போகும் 10,000 டாலருக்கு 4,55,000 பக்காவாக கிடைக்க வகை செய்யுமாறு வங்கியுடன்ஒரு பார்வர்டு கான்ட்ராக்ட் போடலாம்.
அதாவது வங்கியில் எனக்கு இந்த தேதியில் அல்லது இந்த மாதத்தில் 10,000 டாலர் வரப் போகிறது என்று கூறினால் வங்கி அவருக்கு இவ்வளவு ரூபாய் தருவதாக ஒத்துக் கொள்ளும் (அந்த தினத்தில் டாலரின் மதிப்பு எப்படி இருந்தாலும்) டாலரின் மதிப்பு காலம் காலமாக கூடி வந்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் அப்படி பார்வர்ட் கான்ட்ராக்ட் போடாமல் டாலர் வரும் தினம் என்ன மதிப்பு இருக்கிறதோ அதை வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள். இது தான் பலரை தற்போது நஷ்டப்படுத்துகிறது.ஆனால், தற்போது இருக்கும் சூழ்நிலை சிறிது வேறுபட்டுள்ளது.
அதாவது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கூடியுள்ளதால் பல வெளிநாடுகளில் இருந்து நம்மிடம் சரக்குகள் வாங்காத அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது முன்பு ஒரு டாலர் விலை சொல்லிய சட்டையை, தற்போது ஏற்றுமதியாளர் ஒரு டாலர் 15 சென்ட் என்று சொல்ல வேண்டிய நிலை. ஆதலால், வேறு நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர் சிறிது விலை குறைவாக கூறினால் அவரிடம் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் பல ஆர்டர்கள் வராமல் போகும்.என்ன இருந்தாலும் டாலரின் மதிப்பு ரூ. 40க்கு கீழ் வராது என்ற எண்ணம் பல ஏற்றுமதியாளர்களுக்கு இருந்து வந்தது. ஆனால், சென்ற வாரம் ரூ.40க்கும் கீழேயும் சென்று ஏற்றுமதியாளர்களை கதிகலங்கச் செய்து விட்டது.குறையும் டாலரின் மதிப்பு எல்லாரையும் பாதித்துள்ளதா?
இந்தியாவில் பல ஏற்றுமதி பொருட்கள், இறக்குமதியை நம்பி உள்ளது. அதுபோன்று இறக்குமதியை நம்பி இருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு அதிகம் பாதிப்பு இல்லை. ஏனெனில், அவர்களின் இறக்குமதி செலவும் தற்போது பெருமளவில் குறைந்து உள்ளதே, அதனால் தான் (குறிப்பாக வைரம், தங்கம், ஏற்றுமதியாளர்கள்). மற்றபடி எல்லா இறக்குமதியாளர்களுக்கும் இந்த வருடம் முழுவதும் பண்டிகை காலம் தான். குறிப்பாக அரசாங்கத்தின் ஆயில் கம்பெனிகளுக்கு அவர்களின் ஆயில் இறக்குமதி செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் இருந்து வெளிநாடு சுற்றுலா செல்பவர்களுக்கு செலவுகள் குறையும்.ஏன்?
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் இந்தியாவிற்கு பணம் அனுப்புகிறார்கள். ஏன் அவர்கள் அங்கே வைத்துக் கொள்ளலாமே என்று நினைக்கிறீர்களா?
அங்கு அதிகம் வட்டியோ, வருமானமோ கிடைக்காதது தான் காரணம்.ண பங்குச் சந்தைக்கு வெளிநாட்டுப் பணம் அதிக அளவில் வருகிறது. இது ஒரு முக்கியமான காரணம். இந்தியப் பங்குச் சந்தை, தற்சமயம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதால் இங்கு முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டலாமே என்ற எண்ணம் தான்.சமீபத்தில் முடிவடைந்த அரசாங்க வெளியீடான பவர் கிரிட் கார்ப்பரேஷனில் முதலீடு செய்ய வெளிநாட்டு கம்பெனிகள் 400 கோடி டாலர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இதுபோல புதிய வெளியீடுகளில் முதலீடு செய்யவும், செகண்டரி மார்க்கெட்டில் முதலீடு செய்யவும் பல மில்லியன் டாலர்கள் இந்தியாவிற்குள் வருகிறது. இந்த அதிகப்படியான வரத்து டாலர் மதிப்பை குறைக்கிறது.உங்கள் ஊருக்கு ஒரு நாளைக்கு ஐந்து லோடு தக்காளி போதும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு நாளில் பத்து லோடு தக்காளி வந்தால் விலை என்ன ஆகும். நேற்றைய விலையை விட பாதியாகும் அல்லவா? அதே போலத்தான், டாலர் சந்தையும், தேவைக்கு அதிகமாக டாலர் உள்ளே வர வர, அதன் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.
ஏன் அரசாங்கம் தலையிடவில்லை?
முன்பெல்லாம் டாலரின் மதிப்பு குறையும் போதெல்லாம் ரிசர்வ் வங்கி மார்க் டாலர்களை வாங்கும். டாலரின் மதிப்பு தூக்கும். ஏற்றுமதியாளர்கள் காப்பாற்றப்பட்டு வந்தனர். அதே சமயம் ஒவ்வொரு முறை டாலர் மதிப்பு கூடும் போதும் அரசாங்கம் பெட்ரோல் விலையை கூட்டி வந்தது. இது பண வீக்கத்தை ஏற்படுத்தியது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி தற்போது டாலர் மார்க்கெட்டில் நுழைவதே இல்லை. இதனால், ஆண்டு ஆரம்பத்தில் ஆறு சதவீதமாக இருந்த பண வீக்கம் தற்போது 3.23 சதவீதமாக இந்த வாரம் குறைந்துள்ளது. பண வீக்கம் குறைந்துள்ளதே என்று பையை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கச் சென்றால், கடைகளில் விலைகள் குறையவே இல்லை. முன்பெல்லாம் மூன்று ரூபாய் எடுத்துக் கொண்டு சென்றால் பை நிறையக் காய்கறி வாங்கி வருவாராம் எனது அப்பா. இப்போதும் அதே மூன்று ரூபாய்க்கு பை நிறைய வாங்கி வரலாம். ஆனால், சட்டைபையின் பை நிறைய.
ஒரே ஒரு மன நிறைவுவேறு பல நாடுகளிலும் இதுபோல டாலருக்கு எதிரான அவர்கள் நாட்டின் கரன்சியின் மதிப்பும் கூடி வருவதால் அது நமக்கு ஒரு பெரிய மன நிறைவு தரும் விஷயம். இந்தியாவில் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கவில்லை. இல்லாவிடில் 11 சதவீத இந்திய ரூபாய் உயர்வுக்கு நமது ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்.
ரூபாய்க்கு எதிராக மற்ற முக்கியமான கரன்சிகளின் மதிப்பு எப்படியுள்ளது?
யூரோ 56.580, பிரிட்டிஷ் பவுண்ட் 81.15, சுவிஷ் பிராங் 36.06, ஜப்பான் யென் 34.59, கனடா டாலர் 40.05.
மற்ற கரன்சிகள் ரூபாய்க்கு எதிராக சிறிது கூடியுள்ளது. (கடந்த ஒன்பது மாத நிலவரத்தை வைத்து பார்க்கும் போது).
மற்ற நாடுகளில் டாலருக்கு எதிரான அவர்கள் நாட்டின் கரன்சி மதிப்பு எப்படி உள்ளது?
சிங்கப்பூர் 5.7 சதவீதமும் , மலேசியா 5.3 சதவீதமும் ,சீனா 5.6 சதவீதமும் , ஜெர்மனி 11.2 சதவீதமும் , சிலி 3.1 சதவீதமும் , தாய்லாந்து 16.7 சதவீதமும் , கனடா 11.4 சதவீதமும் , பிரேசில் 14.8 சதவீதமும் , கொரியா 3.6 சதவீதமும் , இந்தியா 11.3 சதவீதமும் , போலந்து 13.7 சதவீதமும் , யூ.கே. 8.8 சதவீதமும் , ஹங்கேரி 15.6 சதவீதமும் ,
ஆஸ்திரேலியா 14.3 சதவீதமும் கரன்சி மதிப்பு கூடியுள்ளது . மேலும் தைவான் 1.2 சதவீதமும் , அர்ஜெண்டினா 3.9 சதவீதமும் , மெக்சிகோ 0.3 சதவீதமும் , தென் ஆப்ரிக்கா 2.4 சதவீதமும் , ஹாங்காங் 0.0 சதவீதமும் கரன்சி மதிப்பு குறைந்துள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்?
*சாப்ட்வேர் ஏற்றுமதியாளர்கள்.
* கார்மென்ட் ஏற்றுமதியாளர்கள்.
*விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.
*லெதர் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.
*கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.
*மற்றும் இறக்குமதியை நம்பி இருக்காத எல்லா துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களும்.
ஏற்றுமதியாளர்கள் என்ன செய்ய வேண்டும்
*உங்கள் கம்பெனியின் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
*உள்நாட்டில் நீங்கள் வாங்கும் பொருட்கள் எதையாவது இறக்குமதி செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படி முடிந்தால் அதை கட்டாமல் இறக்குமதி செய்து உபயோகிக்க வேண்டும். அப்படியானால் அடக்க விலை குறையும்.
*பார்வர்ட் கான்ட்ராக்ட் கட்டாயம் போட வேண்டும் (மிகச் சமீபத்தில் டாலரின் மதிப்பு ரூ.42 வரை சென்றது. அப்போதெல்லாம் ஏற்றுமதியாளர்கள் பார்வர்ட் கான்ட்ராக்ட் போட மனது வரவில்லை. இன்னும் கூடும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்)
*ஏற்றுமதி பொருளுக்கான விலை வேறு கரன்சியில் நிர்ணயிக்க முயல வேண்டும். அதாவது யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற கரன்சிகளில். இந்திய ரூபாய்க்கு எதிராக யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் ஆகிய கரன்சிகள் வலுவாகவே இருக்கிறது.
*நீங்கள் உங்களது ஏற்றுமதிக்கான பணத்தை ரூபாயாகவும் பெறலாம் (இதை அரசாங்கம் அனுமதிஅளித்துள்ளது). உங்களது சரக்குகளை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் அவ்வாறு செய்யலாம்.
அரசாங்கம் என்ன செய்துள்ளது?
தொடர்ந்து வீழும் டாலரின் மதிப்பு அரசாங்கத்தின் தூக்கத்தை தொலைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பின் மதிப்பு (இந்திய ரூபாயில்) மிக அதிகமாக வீழ்ந்துள்ளது.
டாலரின் மதிப்பு ரூ. 40க்கு கீழே சென்றதும், ரிசர்வ் வங்கி டாலர் மதிப்பை தூக்கி நிறுத்த பல புதிய முயற்சிகளை எடுத்தது.
*தனிப்பட்ட நபர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய இருந்த உச்ச வரம்பான 1,00,000 டாலரை, 2,00,000 டாலராக உயர்த்தியுள்ளது. அதாவது நீங்கள் 2,00,000 டாலர் வரை வெளிநாடுகளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். வீடு வாங்கலாம், வங்கிகளில் போட்டு வைக்கலாம். மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.
*இந்திய கம்பெனிகள் வெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ள கடன்களை திருப்பி செலுத்த 500 மில்லியன் டாலர்கள் வரை யாருடைய அனுமதியும் பெற வேண்டாம்.
*இந்திய மியூச்சுவல் பண்டுகள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளினால் டாலர் மதிப்பு கூடும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.
இதனால் பலன்கள் இருக்குமா?
அதிகப்படியான டாலர் நாட்டின் உள்ளே வருவதால், பலன்கள் குறைவாகவே இருக்கும்.
இந்திய முதலீடுகளே அதிகம் வருவாயைத் தருவதால் ஏன் வெளிநாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம்.இந்த வருடம் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 1100 கோடி டாலர்கள் பங்கு சந்தை முதலீட்டிற்காக வந்துள்ளது. கடந்த முழு வருடத்திலேயே 900 கோடி டாலர்கள் தான் வந்திருந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்திய சந்தை முதலீட்டிற்கு பிரகாசமாக உள்ளது என்று.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கம் சில சலுகைகளை கொடுத்திருந்தாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொரி தான். இந்தியா மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. ஏற்றுமதியை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆதலால், இன்னும் சிறிது சலுகைகளை அதிகப்படுத்தி ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும். கொடுத்துள்ள 1400 கோடி சலுகை போதாது என்று ஏற்றுமதியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த வருட ஏற்றுமதி குறியீடான 16000 கோடி டாலரை அடைய முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான்?
நன்றி: தினமலர்